மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சிறப்புக் கட்டுரை: தமிழ்த் தேசியம் - தலித்தியம் நேர் எதிரானதா?

சிறப்புக் கட்டுரை: தமிழ்த் தேசியம் - தலித்தியம் நேர் எதிரானதா?

மதரா

மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்று அறிவித்ததற்கு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு காத்திரமான போராட்டங்கள் தமிழகத்திலேயே நடந்துள்ளன. தேசிய இனங்களை அங்கீகரிக்காத, அவற்றின் உரிமைகளில் கைவைக்கிற மத்திய அரசின் எந்த முழக்கத்தையும் எதிர்க்கும் தமிழகத்தில், ஒரே கல்வி, ஒரே தேர்வு என்ற சமூகநீதிக்கு எதிரான கொள்கைக்கு மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் கடைநிலையில் இருக்கும் அனிதா என்ற பெண் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்குக் கவனத்தில் கொள்ளப்படும் கட் ஆஃப் மதிப்பெண் 196.75 பெற்றுள்ள நிலையில் நீட் தேர்வுமுறையால் அவரது கனவு நசுக்கப்படுகிறது. அவர் உடனே அடங்கி ஒடுங்கிவிடவில்லை. உயர் நீதிமன்றம் செல்கிறார். அங்கும் நீதி மறுக்கப்படுகிறது. இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்திவிட்டு தீக்கிரையாகிப் போகிறார்.

அவளது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தமிழகம் தாண்டியும் தொடர்கிறது. குஜராத்தில் நடைபெற்ற நீட்டுக்கு எதிரான போராட்டங்களில் அனிதாவின் புகைப்படத்தோடு போராடியவர்களைப் பார்க்க முடிந்தது. புலம்பெயர் நாடுகளிலும் அதிகமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளை முன்நகர்த்திப் போராட்டம் சென்றுகொண்டிருக்கும்போது ஆக்கபூர்வமான பல விவாதங்களும் நடைபெறுகின்றன. சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோஸில் இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அனிதாவுக்கான நினைவஞ்சலிக் கூட்டத்தில் இயக்குநர்கள் ரஞ்சித், அமீர் பேசிய பேச்சுக்கள் அதில் முக்கியமானவை.

தேசிய இனப் பிரக்ஞை இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மற்ற இனங்களைவிடத் தமிழகத்தில் அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள சாதியக் கொடுமைகள் இங்கும் விதிவிலக்கில்லாமல் நிறைந்திருக்கின்றன. மத்திய அரசு கொண்டுவரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை எதிர்த்து ஒன்றிணையும் மக்கள் தமிழ்த் தேசியத்துக்கு வலு சேர்க்கின்றனர். அதேசமயம் சாதிச் சங்கங்களில் இணைந்து செயல்படுவதும், சாதியப் படுகொலைகள், கௌரவக் கொலைகள் நடைபெறுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த பிரச்சினையை உள்ளடக்கி நடைபெற்ற இருவரது உரையாடல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை உண்டுபண்ணியுள்ளது.

அமீரின் பேச்சு, பல்வேறு முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள் பேசுவதின் ஒரு பகுதியாக இருக்கிறது. சாதியற்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற கருத்துகளாக உள்ளன. ரஞ்சித்தின் பேச்சு, “இல்லை இன்னும் சாதி இருக்கிறது. சேரிகளும் ஊரும் பிரிந்து கிடக்கின்றன. சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் அமையாது. முதலில் சுய விமர்சனம் செய்துகொள்வது அவசியம்” என்று உண்மையின் மேல் கல் எறிவதாக உள்ளது. இவர்கள் பேசிய காணொளிகள் இணையத்தில் அதிக நபர்களால் பகிரப்பட்டு, பரவியுள்ளதால் நேரடியாக நாம் விஷயத்துக்குள் நகரலாம்.

“நான் இன்னும் சேரியில்தான் இருக்கிறேன். நான் யார் என்பதை அவன் முடிவு செய்கிறான்” என்று சொல்லும் ரஞ்சித்தின் வலி புரிகிறது. ஆனால் தலித் அல்லாதவர்களால் அதை முழுவதுமாக உணர்ந்துவிட முடியாது. கபாலி படத்தை ரஞ்சித் இயக்கப் போகிறார் என்ற தகவல் வந்த உடனே ஃபேஸ்புக்கில் ட்விட்டரிலும் அவரது சாதியைக் குறிப்பிட்டு வந்த பதிவுகள் ஏராளம். படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் அது தொடர்ந்தது. தினமணி நாளிதழ், “ரஜினி இதுபோன்ற லோ பட்ஜெட் இயக்குநர்களுக்கு படம் பண்ணக் கூடாது” என்று அத்தகைய விமர்சனத்தையே கொஞ்சம் பாலீஷ் செய்து முன்வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஓர் இயக்குநர் தமது அரசியலை முன்வைக்கும்போது அதை சகித்துக்கொள்ள முடியாமல் எழும் விமர்சனங்கள் அருவருக்கத்தக்கவையாகவே உள்ளன.

தாமும் தாம் சார்ந்த சமூகமும் அனுபவித்துவரும் இதுபோன்ற எண்ணற்ற வலிகள்தான் ரஞ்சித்தைக் கொதித்தெழ வைத்துள்ளன. அதை உணராமல் விளங்கிக்கொள்ள முடியாது.

ஆனால், இந்த வலியை யாரை நோக்கி, எந்தச் சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற புரிதல் ஒரு சாமானியனைவிட ஓர் இயக்குநராகக் கோடிக்கணக்கான மக்களிடையே தனது அரசியலைத் திரைப்படம் மூலம் கொண்டுசேர்க்கிற ரஞ்சித்துக்கு அதிகமாகவே இருக்க வேண்டும். நீட் பிரச்சினைக்காக அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டு இந்தச் சமூகத்தையே தட்டியெழுப்பியுள்ள இந்தச் சமயத்தில் இதை விவாதிக்க வேண்டுமா என்ற கேள்வி முக்கியமானது.

ஜல்லிக்கட்டுப் போராட்டமும், அனிதா தற்கொலையைத் தொடர்ந்து வெடித்துள்ள இந்தப் போராட்டமும் சமூகத்தில் எப்போதாவது நிகழும் அற்புதங்கள். இது விரைவில் கலைந்துவிடக்கூடியதுதான், இருப்பினும் அதற்காக இதைப் புறம் தள்ளிவிட முடியாது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான தடைக்காகவோ, பீட்டா எதிர்ப்புக்காகவோ நடைபெற்றது அல்ல. கருவுற்ற பெண்களிலிருந்து, குழந்தைகள், இளைஞர்கள் எனத் திரண்டு விடிய விடிய நடத்திய போராட்டம் பாரம்பரிய விளையாட்டைக் காக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அல்ல. மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் விரோதத் திட்டங்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை என அத்தனைக்குமான எதிர்வினையே அது. மக்களுக்கு இந்த அரசின் மேலுள்ள ஒட்டுமொத்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

அதேபோல் அனிதாவின் தற்கொலை ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தட்டியெழுப்பி நீட்டுக்கு எதிராகப் போராடத் தூண்டியதையும், பள்ளி மாணவிகள்கூட வகுப்பைப் புறக்கணித்துச் சாலை மறியலில் ஈடுபட்டதையும், திரையுலகம் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரையும் இது குறித்துப் பேச வைத்ததையும் வெறுமனே நீட்டுக்கான போராட்டம் மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது.

தற்போது அனிதாவுக்காகக் கூடிய கூட்டம் இதற்கு முன் சாதிக் கொடுமையால் கொல்லப்பட்ட பெண்களுக்கு ஏன் கூடவில்லை என்பதும், இளவரசன், கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கேட்பதிலும் நியாயம் இருக்கிறது.

ஆனால், அனிதாவின் மரணம் அதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது.

இந்த விவாதம் குறித்து, பேராசிரியரும் எழுத்தாளருமான டி.தருமராஜ் தனது ஃபேஸ்புக் பதிவில், “சாதியை ஒழிக்கும் வழிமுறையில் சாதியற்ற நிலையைக் கற்பனை செய்வது முக்கியமான தருணம். இந்தக் கற்பனை இல்லாமல் விமோசனம் இல்லை. ரஞ்சித் சாதி ஒழியவே ஒழியாது எனப் பூரணமாக நம்புகிறார். அதுதான் அவரது பிரச்னை” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பூதாகரமாக இருக்கும் சாதியைக் கடந்துவிட்டோம் என்று கற்பனை செய்வது, கள யதார்த்தம் புரியாமல் பேசுவது என்று நினைக்கத் தேவையில்லை. ஏனெனில் இதற்கான உதாரணங்கள் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களிலேயே காணக் கிடைக்கின்றன.

மே பதினேழு இயக்கம் மதுரையில் ஒருங்கிணைத்த பாஜக அலுவலக முற்றுகையில் பசும்பொன் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற மாணவன் கலந்துகொண்டு கைதானார். தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுவருகிறார். தன் சாதியைத் தூக்கிப் பிடிக்கிற ஓர் அமைப்பிலிருந்து சமூக அநீதிக்கு எதிராக இவர் உட்பட எண்ணற்ற மாணவர்கள், இளைஞர்கள் வருவதை வரவேற்று அவர்களைச் சமத்துவ அரசியலுக்குத் தயார்ப்படுத்த வேண்டியதுதானே இப்போதுள்ள ஒரே பணியாக இருக்க முடியும். அவர்களிடம் “நீ ஏன் அதற்குப் போராட வரவில்லை, நீ ஏன் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை” என்று கேட்பது ஆரோக்கியமான முன்னகர்வாக இருக்க வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது.

உண்மையில் ரஞ்சித் கூறுவதுபோல் சேரியில் இருக்கும் அம்பேத்கர் ஊருக்குள் வரவில்லைதான். அது பற்றிப் பேச வேண்டியதும் அவசியம்தான். ஆனால், அது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அடித்து நொறுக்கிவிடக் கூடாது.

“தமிழ், தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்கள் சாதியத்தைக் கண்டிக்கவில்லை, தமிழ்த் தேசியம் பொய்த்துப்போகும்” என்று ரஞ்சித் குறிப்பிடுகிறார். சில அமைப்புகள் அதுபோன்று செயல்படுவது இங்கு விமர்சனத்துக்குள்ளாகித்தான்வருகிறது. அதைத் தவிர்த்து எத்தனை தமிழ்த் தேசிய அமைப்புகள் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிவருகின்றன, வழக்கு நடத்திவருகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். சிலர் மேல் உள்ள கோபத்தை ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியத்தின் மீது வைப்பது முதிர்ச்சியான பார்வை அல்ல.

“பெரியாரியச் சிந்தனைகளை திராவிட இயக்கங்களும் பெரியாரிஸ்ட்டுகளும் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கவில்லை” என்பது ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதில் உண்மை இருக்கிறது. ஆனால், பெரியாரிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களை நிராகரிப்பது போலவே பெரியாரையும் நிராகரித்துவிடுகிறார். அது அவரது பேச்சில், “சேரிக்குள் பெரியார் பெயரில் தெருக்கள் உள்ளன. ஊருக்குள் அம்பேத்கர் பெயரில் தெருக்கள் இருக்கின்றனவா?” என்று வெளிப்படுகிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் இரு துருவங்களாக எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்க்கிறார் என்பது விளங்கவில்லை.

ரஞ்சித்தின் உரையில் முக்கியமான பகுதி “எத்தனை நாளைக்குத் தான் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கப்போகிறோம், அரசியல்வயப்பட வேண்டும்” என்பதுதான். ஆனால், மேலேயுள்ளதைப் பார்க்கும்போது அவர்தான் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளாரோ என்று தோன்றுகிறது.

மாதவராஜின் ஃபேஸ்புக் பதிவு வேறு பார்வையை முன்வைக்கிறது. “முன்னூறு ஆண்டுகள் ஆண்ட பிரிட்டிஷ்காரனை வெளியேற்ற மக்கள் திரண்டபோது, பல ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் சாதியத்தின் கொடுமையை இந்த மண்ணிலிருந்து எப்போது வெளியேற்றப்போகிறோம் என்னும் அம்பேத்கர் குரல் சுருதி பேதமாகக் கேட்டது. எல்லோரும் ஒரே குரலில், ஒரே தொனியில், ஒரே வேகத்தில் பிரிட்டிஷ்காரனுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில், அம்பேத்கரின் குரல் அப்படி ஒலிக்கவில்லை என்பதால் வெறுப்புக்கும் பழிகளுக்கும் ஆளானார். முற்போக்கு இயக்கங்களால்கூட விமர்சனங்களுக்கு ஆளானார். அம்பேத்கர் தன் பார்வையில், கருத்தில் உறுதியாகவே இருந்தார். நாடு விடுதலை பெற்ற பிறகு, அவர் எழுப்பிய கேள்விகள் இன்று வரை பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது கேள்விகள் இந்திய சமூகத்தின் மனசாட்சியை கொஞ்சமேனும் உறுத்தச்செய்தன. அதன் விளைவுகளாகத்தான் தலித் மக்களுக்கு இன்று கிடைத்திருக்கும் கொஞ்ச வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் என்பதை நாம் மறந்துவிட முடியாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூகச் செயற்பாட்டாளர் ஓவியாவின் பதிவு இதற்குச் எதிர்வினை புரிவதாய் அமைந்துள்ளது. “அம்பேத்கர், பெரியார் இருவரும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதி ஒழிப்புக்கான தங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளக் கோரும் வேளையில்தான் அம்மாதிரியான கேள்விகளை (சுதந்திரம் வந்தால் சாதிக் கொடுமை ஒழிந்துவிடுமா?) எழுப்பினர். மேலும் அவர்கள் யாரிடம் அந்தக் கேள்விகளை வைத்தார்கள் என்பதும் மிகவும் முக்கியம். தவிர காங்கிரஸ்காரர்கள் அமைத்த போராட்டங்களில் பெரியார் பங்குகொண்ட வேளையில் அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய இந்த வாதங்களை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. உதாரணமாகக் கதர் கட்டினால் எனது சூத்திரப் பட்டம் போய்விடுமா என்று பெரியார் கேட்டதில்லை. கள்ளுக்கடை மறியல் நடத்தினால் எனது சாதி போய்விடுமா என்று அந்த இடத்தில் போய் சந்தேகம் எழுப்பியதில்லை. காங்கிரஸ்காரர்கள் அரசியல் சட்டம் எழுதக் கூப்பிட்டபோது கூப்பிட்டவர்களின் சமதர்மக் கோட்பாடு பற்றி அம்பேத்கர் கேள்வி எழுப்பவில்லை. பெரியாரின் வைக்கம் போராட்டம், அம்பேத்கரின் மகர் குளப் போராட்டம் இவையெல்லாம் அதற்கென தனியாகக் கட்டமைக்கப்பட்ட போராட்டங்கள். இன்றும் சாதி ஒழிப்புக்கான களங்களில் இத்தகைய வினாக்கள் சமரசமற்று இதைவிடக் கடுமையாக எழுப்பப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன” என்று பதிவு செய்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஆட்சி அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற கொள்கையோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் களப்பணி ஆற்றிவரும் தோழர் திருமாவளவனின் கருத்தும் ரஞ்சித்தின் கருத்தோடு ஒத்துப்போகவில்லை. எவிடென்ஸ் கதிரின் ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திருமா, “தலித் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி தமிழ் மைய நீரோட்ட அரசியலில் இருந்து எவரும் எங்களை ஒதுக்க முடியாது. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நிற்பதுதான் தலித் அரசியல். மாநில சுயாட்சி, இன மொழி உரிமைகளுக்காக இந்தியாவிலேயே குரல் கொடுக்கும் ஒரே தலித் இயக்கம் விசிக. தமிழ்த் தேசியத்தில் இருக்கும் சாதியக் கூறுகள் குறித்த ரஞ்சித்தின் கோபம் நியாயம் என்றாலும் அனிதா விஷயத்தில் இந்த சந்தர்ப்பத்தில் அதை வெளிப்டுத்தியது தேவையற்ற ஒன்று. அனிதாவுக்காகக் குரல் கொடுப்பவர்களில் சாதியவாதிகள் இருந்தாலும் அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக சக்திகளாகப் பார்க்க வேண்டுமே தவிர, எதிராக நிறுத்தக் கூடாது" என்று பரந்துபட்ட பார்வையை முன்வைக்கிறார்.

“ரஞ்சித் பேசிய விஷயங்களில் தவறில்லை, பேசிய வேளை தவறு எனத் திருமாவளவன் சொன்னதில் பலரும் ஆறுதலும், நிம்மதியும் கொள்கிறார்கள். ரஞ்சித் பேசிய விஷயங்களில் தவறில்லை. அவைகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு நாம் பயணிப்போம் என தலித் அல்லாத தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?” என்று கேட்கிறார் மாதவராஜ். ரஞ்சித் கூறுவதுபோன்று, இங்குள்ள அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். மாறாக இப்போதும் ரஞ்சித்தை அவரது சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

சகல தரப்புகளிலும் மனமாற்றம் நடக்க வேண்டும். இணக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நமது சிந்தனையும் பேச்சும் அவ்விதத்தில் இருக்க வேண்டும். விமர்சனமும் அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான உரிமைகளை நாம் ஒன்றிணைந்து போராடிப் பெற முடியும்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon