மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஹார்ட் அட்டாக் ஆப்!

ஹார்ட் அட்டாக் ஆப்!

இதய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கார்டியாலஜிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா புதிய ஆப் ஒன்றை (csi) கடந்த சனிக்கிழமை (செப் 9) அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகில் பெரும்பாலானோர் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும், மாரடைப்பினால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. மாரடைப்பின்போது அருகில் யாரும் இல்லாததால் பலர் சிக்கலான நிலைக்குச் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘ஹார்ட் அட்டாக்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆப், இதய நோயாளிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இதன்மூலம், பயனர்களுக்கு அருகில் உள்ள சுகாதார மையங்களைப் பற்றிய விரிவான மற்றும் துல்லியமான தகவல்களை அளிக்கும். மேலும், இது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் முகவரிகளை உங்களுக்குக் கொடுக்கும். அதேபோல் அந்த நேரத்தில் எந்த மருத்துவரை எளிதாக அணுக முடியும் போன்ற விவரங்களையும் அளிக்கும்.

இதுமட்டுமல்லாமல் டெல்லி சி.எஸ்.ஐ. ‘ஹார்ட் அட்டாக் ரிஜிஸ்டரி’ என்ற பெயரில் கூடுதலாக ஓர் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. அது பயண நேரங்களைக் கண்காணிக்கவும், தொழில்நுட்ப உதவிகளைப் புரியவும் பயன்படுகிறது.

இந்த ஆப் உலக இதய நாளான செப்டம்பர் 29 தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ஆப்பை ஆன்ட்ராய்டு ஓஎஸ் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, இதய நோயாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் மேலும் சில ஆப்களை டெல்லி சி.எஸ்.ஐ. அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon