மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

அதிகரிக்கும் சில்லறை பணவீக்கம்!

அதிகரிக்கும் சில்லறை பணவீக்கம்!

நாட்டின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.20 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என்று ரியூட்டர்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 2.36 சதவிகிதமாக இருந்தது. அது, ஆகஸ்ட் மாதத்தில் 3.20 சதவிகிதமாக உயரும் என்று ரியூட்டர்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் காணப்படும் அதிகபட்ச பணவீக்க விகிதமாகும். செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் சுமார் 40 பொருளாதார வல்லுநர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வில் பணவீக்க விகிதம் 2.50 சதவிகிதம் முதல் 3.55 சதவிகிதம் வரையில் இருந்ததாகவும், இந்த ஆய்வின் இறுதி முடிவுகள் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில்லறை விற்பனைப் பணவீக்க விகிதத்தை 4 சதவிகிதமாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. எனினும், இந்த ஆய்வில் 3.20 சதவிகித வளர்ச்சியே மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்துக்குப் பிறகான அதிகபட்ச பணவீக்க விகிதமாகும். சில்லறை விற்பனை விலைப் பணவீக்கத்தில் 50 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள காய்கறி மற்றும் குளிர்பானங்களுக்கான பணவீக்கம் முந்தைய மூன்று மாத விலைச் சரிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிக மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon