மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பும் ரகுராம் ராஜனும்!

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பும் ரகுராம் ராஜனும்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணம், ஊழல், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி அரசு விளம்பரம் செய்து வந்தது. ஆனால், ஒழிந்தது என்னவோ மக்களின் நிம்மதிதான். பணத்துக்காக ஏ.டி.எம்-களின் வாசலில் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதன் பிறகு பேராசிரியராகப் பணியாற்ற அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்துக்கே திரும்பிச் சென்றுவிட்டார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தான் எப்போதுமே ஆதரித்ததில்லை என்பதையும், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டையும் அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ரகுராம் ராஜனின் ‘I do what I do' என்ற புத்தகம் வெளியாகியது. இந்தப் புத்தகத்தில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து என் கருத்துகளை அரசாங்கம் என்னிடம் கேட்டது. என்னுடைய கருத்துகளை நான் கூறினேன். பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நீண்ட கால அடிப்படையில் பலன்கள் இருக்கும் என்றாலும்கூட, குறுகிய கால அடிப்படையிலான பலன்கள் குறைவாகவே இருக்கும் என்று நினைத்தேன். மேலும், இலக்குகளை அடைய சிறந்த மாற்று வழிகள் இருந்தன. இந்த கருத்துகளை நான் வெளிப்படையாகக் கூறிவிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜனின் புத்தகம் குறித்து அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பதிலளிக்கையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன:

பணமதிப்பழிப்பு நடவடிக்கை முடிவு குறித்து உங்களிடம் அரசு அணுகியபோது?

நான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தபோது பணமதிப்பழிப்பு நடவடிக்கை கூறித்து ரிசர்வ் வங்கி அணுகப்படவில்லை.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து உங்கள் கருத்து?

பணப்பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நோட்டுகளைச் சந்தையில் இருந்து நீக்கம் செய்தால், அதனால் பொருளாதாரச் செயல்பாடுகளில் கடுமையான தாக்கம் இருக்கும் என்பதை எந்தவொரு பொருளாதார வல்லுநரும் கூறிவிடுவார். முக்கியமாக கிரெடிட் கார்டு போன்ற மாற்றுவழிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதனால் கடுமையான சிக்கல்கள் ஏற்படும்.

பணமதிப்பழிப்பால் ஏற்படும் செலவு - பலன்கள் குறித்து உங்கள் கருத்து?

பணமதிப்பழிப்பால் வெளிப்படையாக ஏற்பட்ட செலவுகளை நாம் பார்த்தோம். ஏராளமான செலவுகள் ஏற்பட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நான் பார்த்த வரையில் 1 முதல் 2 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. 2.5 லட்சம் கோடியையும் நோக்கிச் செல்கிறது. இது மிகவும் அதிகமான தொகை. வேறு சில செலவுகளும் உள்ளன. பணத்துக்காக வரிசையில் நின்ற மக்கள், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்ட 8,000 கோடி ரூபாய் செலவு, புதிய பணத்தை வெளியிட வங்கிகளுக்கு ஏற்பட்ட செலவு, வங்கி ஊழியர்கள் செலவழித்த நேரம், வங்கி மேலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் செலவிட்ட நேரம், அனைத்து டெபாசிட்களுக்கும் வழங்கப்படும் வட்டி ஆகியவை பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட செலவுகளாகும். பலன்கள் வந்தால், அவை என்ன கொண்டு வருகின்றன என்பதைப் பார்க்கலாம். பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்படக்கூடிய பொருளாதார ஆபத்துகள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்க வேண்டுமல்லவா?

ரிசர்வ் வங்கியின் ஆளுநரே பொருளாதார ஆபத்துகளை நிர்வகிக்கும் முக்கிய தொழில்நுட்பவாதி ஆவார். 350 முதல் 400 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பைக் கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தில் வட்டி விகிதக் கொள்கைகளைத் தீர்மானிப்பது போன்ற பொறுப்புகள் அவருக்கு உள்ளன. பொருளாதாரத்தின் தன்மைக்கு ஆபத்து ஏற்படும்போதும், வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படும்போதும் ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்க வேண்டும். அதனால், பொறுப்பிலிருக்கும்போது, சில சமயம் நாம் வாய் திறந்து பேச வேண்டியிருக்கும். சில சமயம் நமக்குத் தரப்படும் அழுத்தங்களை நிராகரிக்க வேண்டும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து உங்கள் கருத்து?

பணம் அச்சிடும் பணி தொடங்கிய காலத்துக்கும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் புழக்கத்துக்கு வெளியே சென்ற பணத்தை இடமாற்றம் செய்வது என்பது சாத்தியமாகத் தெரியவில்லை. பணம் இல்லை என்றால், அதை மக்களுக்கு விநியோகிக்க முடியாது. விநியோகம் குறித்து சில குறைகளை நீங்கள் கூறலாம். ஆனால், தேவையான பணம் அச்சிடப்படவில்லை.

நன்றி: http://www.huffingtonpost.in/

தமிழில்: அ.விக்னேஷ்

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon