மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

மெரினா: ஒரே நாளில் மூன்று பேர் பலி!

மெரினா: ஒரே நாளில் மூன்று பேர் பலி!

சென்னை, மெரினா கடலில் குளித்த இரண்டு பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினாவில் விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுபோன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 10) மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சுதாகர், முருகன் என்பவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். அப்போது, சுதாகரின் மகன் ஆகாஷும், முருகனின் மகன் தனுஷும் இருவரும் கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வந்த அலை அவர்களை அடித்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அண்ணா சதுக்கம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸார் மீனவர்கள் உதவியுடன் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஆகாஷ் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. தனுஷ் உடல் கிடைக்கவில்லை. ஆகாஷ் ஒன்பதாம் வகுப்பும், தனுஷ் ஏழாம் வகுப்பும் படித்து வந்தார்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நண்பர்களுடன் சேர்ந்து மெரினாவில் குளித்துக்கொண்டிருந்தபோது, அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலும் இதுவரை கிடைக்கவில்லை. இப்படி மெரினாவில் ஒரே நாளில் மூன்று பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon