மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

இன்றைய ஸ்பெஷல்: மீன் கட்லெட்!

இன்றைய ஸ்பெஷல்: மீன் கட்லெட்!

தேவையானவை:

சதையுள்ள மீன் - அரை கிலோ

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பற்கள்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு

புதினா - அரை கைப்பிடி அளவு

பெரிய வெங்காயம் - 2

பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மைதா - 3 தேக்கரண்டி

பிரெட் தூள் - 100 கிராம்

செய்முறை

மீனைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். (மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைப்பதால் மீனின் வாடை நீங்கிவிடும்). வேகவைத்த மீனின் முள்ளை நீக்கிவிட்டு, உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ளவும். உதிர்த்த மீனுடன் வதக்கி அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். (கலவை கெட்டியாக இல்லையென்றால் பிரெட்டில் உள்ள ஓரங்களை நீக்கிவிட்டு நடுப்பகுதியைப் போட்டு பிசைந்து கொள்ளவும்).

ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிரெட் தூளை ஒரு தட்டில் பரவலாகப் போட்டு வைக்கவும். பிசைந்த மீன் கலவையை வடையாக தட்டி, மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். பிறகு அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் சிவக்கப் பொரித்து எடுக்கவும். அல்லது தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சுவையான மீன் கட்லெட் தயார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon