மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சிறப்புக் கட்டுரை: கௌரி லங்கேஷ் படுகொலைக்கு அப்பால்... - அ.குமரேசன்

சிறப்புக் கட்டுரை: கௌரி லங்கேஷ் படுகொலைக்கு அப்பால்... - அ.குமரேசன்

கோழைத்தனமாகக் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நினைவேந்தல், ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கண்டனம் முழங்குவதாகவும் கடந்துவிடுமானால் அவருக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்றே பொருள். அவர் எதற்காகவெல்லாம் கருத்தாளராகவும் களப்பணியாளராகவும் இயங்கினாரோ அந்த பகுத்தறிவு, சமூக நீதி, ஒதுக்கப்பட்டோர் உரிமை, மக்கள் நல்லிணக்கம், பாலின சமத்துவம் உள்ளிட்ட இலக்குகளுக்காகத் தயக்கங்கள் களைந்து, அச்சங்கள் துறந்து செயல்பட உறுதி பூணுவதுதான் உண்மையான மரியாதை. அந்த இலக்குகளில் ஒன்றுதான் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.

கருத்துரிமை என்பது “வழங்கப்படுவது” அல்ல

மனிதப் பரிமாணத்தின் தனித்துவமே கருத்து உருவாவதும் அதை வெளிப்படுத்துவதும்தான். கருத்தை வெளிப்படுத்தாமலே இருந்திருந்தால் மானுடப் பயணம் எப்போதோ முடிந்து போயிருக்கும். கருத்துரிமை என்பது அரசாங்கத்தாலோ அமைப்புகளாலோ “வழங்கப்படுவது” அல்ல. அது இயற்கையானது. நம்மைச் சுற்றி ஏதேதோ நிகழ்கிறபோது அது பற்றிய கருத்து மனதில் உருவாவதைத் எவராலும் தடுக்க முடியாது. அந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவது, அதன்மீது விவாதிப்பது, விவாதத்தின் அடிப்படையில் கருத்தைச் செழுமைப்படுத்துவது அல்லது கருத்தை மாற்றிக்கொள்வது... இவை எல்லாம் நாகரிக சமூகத்தின் ஆரோக்கிய அறிகுறிகள்.

உலகம் சந்தித்திருக்கிற, சந்தித்துக்கொண்டிருக்கிற ஒடுக்குமுறைகளில் எல்லாம் மிகக் கொடூரமான ஒடுக்குமுறை கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறைதான். கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் மிகக் கொடூரமானவன் என்று பெயர் பெற்ற ஒரு சர்வாதிகாரி இருந்தானாம். அவனைச் சந்தித்துப் பேட்டி காணச் செல்கிறான் ஓர் எழுத்தாளன். சர்வாதிகாரியிடம் “உங்கள் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே” என்று கேட்கிறான். அதற்கு சர்வாதிகாரி, “தவறு. என்னைப் பற்றி நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம். நான் ஓர் அயோக்கியன் என்ற கருத்துகூட உங்களுக்கு இருக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்கிறான். எழுத்தாளன் வியப்போடு, “அப்படியா, மக்கள் பேசிக்கொள்வதற்கு நேர்மாறாக அல்லவா நீங்கள் சொல்வது இருக்கிறது” என்று கூறுகிறான். “ஆம். ஆனால், அந்தக் கருத்தை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது” என்று முடித்தானாம் சர்வாதிகாரி. இப்போது நமது நாட்டில் அரங்கேறும் காட்சிகள் இந்தச் சர்வாதிகாரியின் கட்டளைதான் இங்கே செயல்பாட்டில் இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

அரசியல் அத்துமீறல்கள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், மதங்களின் கதவடைப்புகள், சாதியப் பாகுபாடுகள், மூடநம்பிக்கைகள், ஆணாதிக்க அக்கிரமங்கள் பற்றிய ஆழமான கருத்துகளைக் கொண்டிருந்ததோடு அவற்றை மக்களிடையே பரப்பியதற்காகக் கொலையுண்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்பூர்கி ஆகிய வரிசையில் இப்போது கௌரி லங்கேஷ் பெயர் துப்பாக்கித் தோட்டாக்களால் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொலைகளில் ஒரே மாதிரியான திட்டமிட்ட செயல்முறை இருக்கிறது என்று செய்திகளை அலசுவோர் சொல்கிறார்கள். ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற கோட்பாட்டுக்கு ஒத்திசைவாக இப்படி ஒரே மாதிரியான கொலைத் திட்டம் வகுக்கப்படுகிறது போலும்.

உலகின் பல நாடுகளிலும் இப்படி மதத்தின் பெயரால் அரசாங்கம் நேரடியாகவே மதக் கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லக் கூடாது என்று தடைவிதிப்பது அல்லது மத அமைப்புகள் தடை போடுவது நடக்கிறது. அதன் இந்தியப் பதிப்பாக இங்கே நீங்கள் எதை உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டு, கலாசாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டோர் நெருக்குகிறார்கள். அதன் நீட்சியாக, நீங்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைப் பேச வேண்டும், எதை எழுத வேண்டும் என்ற விதிகளையும்கூட உருவாக்குகிறார்கள். அந்த விதிகளை எல்லோரும் தெரிந்துகொள்ளச் செய்வதற்காகவும், இனிமேலாவது எஞ்சியிருப்பவர்கள் விதிப்படி நடந்துகொள்ளுங்கள் என்று எச்சரிப்பதற்காகவும் அவ்வப்போது இந்தப் படுகொலைகள்.

பல நாடுகளில் மனிதநேயம் கொன்ற பயங்கரவாதிகளின் படுகொலைத் தாக்குதல்கள் நடக்கிறபோது, சில மணி நேரங்களில் அல்லது ஓரிரு நாள்களில் ஏதாவது ஓர் அமைப்பு தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று வெளிப்படையாக அறிவித்த செய்தி வரும். இந்தியாவில் ஹெல்மெட் அணிந்துகொண்டு இப்படிப்பட்ட படுகொலைகளை நிகழ்த்துகிற பயங்கரவாதிகளை ஏவிவிட்ட அமைப்போ, குழுவோ தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இவர்களது மதப் பெருமித வீரம் இவ்வளவுதான் போலும்.

அழிப்பதுதான் ‘அவர்கள்’ கருத்து

கருத்துரிமை போலவே அந்தக் கருத்தை விமர்சிக்கிற உரிமையும் அடிப்படையானதுதான். அந்த விமர்சனம் கருத்தாக வெளிப்படட்டும், மக்களிடம் எடுத்துச் செல்லப்படட்டும். ஆனால், இங்கே துப்பாக்கியால் பதிலளிக்கப்படுகிறது. எழுத்தாளர்களின் புத்தகங்களைத் திரும்பப் பெற வைத்துக் கருத்துகள் முடக்கப்படுகின்றன. இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களை விமர்சிக்கிறவர்கள் “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்கிற நேர்மை இல்லை” என்று கூறுகிறார்கள். ஆயுதத்தைக் கையில் எடுப்பதிலிருந்தே மதவெறியர்களின் கருத்துகள் பலவீனமானவை என்று தெரிகிறது என்றும் பேசுகிறார்கள்.

ஆனால், யோசிக்கிறபோது, அவர்கள் கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆம், மாற்றுக் கருத்தை மட்டுமல்ல; மாற்றுக் கருத்து சொல்கிறவர்களையே அழித்தொழிப்பது என்பதுதான் அவர்களுடைய கருத்து, கோட்பாடு, சித்தாந்தம். எந்த மதமும் இதற்கு விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை. கடவுளின் பெயரால், மதப் புனிதம் காப்பதற்காக எதையும் செய்யலாம் என்ற சிந்தனை, மதத்தைப் பின்பற்றும் மக்களின் மனங்களில் ஏற்கப்பட்ட ஒரு தத்துவமாகவே ஏற்றப்பட்டு விடுகிறது. கடவுள் கதைகள் கருணையைப் போதிப்பதோடு நிற்பதில்லை, எதிர்ப்பாளர்களை ஒடுக்குகிற வன்மத்தைப் புனிதப்படுத்தவும் செய்கின்றன.

கருத்தை ஒருக்கும் தெய்வங்கள்

திருவிளையாடல் கதைகளில் ஒன்றான நக்கீர வதை ஓர் எடுத்துக்காட்டு. பெண்ணின் கூந்தலிலிருந்து எழுவது இயற்கையான மணம்தான் என்ற பொருள் தரும் பாடலை எழுதுகிறான் புலவனாக வரும் சிவன். அதை மறுக்கிறான் புலவனாகவே இருக்கும் நக்கீரன். பூக்களைச் சூடிக்கொள்வதாலும் வாசனைப் பொருள்களைப் பூசிக்கொள்வதால்தான் மணம் ஏற்படுகிறதேயன்றி ஒருக்காலும் இயற்கை மணம் இருக்க முடியாது என்று வாதிடுகிறான். அவனோடு எதிர்வாதம் செய்வதற்கு மாறாக, “நெற்றிக்கண்” திறந்து சுட்டெரிக்கிறான் சிவன். புலமைச் சபையில் அவன் தன் கவிதையின் கற்பனைச் சுதந்திரத்திற்காக வாதிட்டிருந்தால் நக்கீரனே அதைப் பாராட்டி வரவேற்றிருப்பான். ஆனால் சிவனின் திருவிளையாடலோ, அதிகார பீடம் சொல்வதை எதிர்ப்பதா என்று ஆத்திரத்தோடு அடக்குவதாக நடந்தது.

கடவுள் பற்றிய கருத்தில் தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்த இரண்யனின் வயிறு கிழிக்கப்பட்டு குடலும் நரம்புகளும் வெளியே இழுத்தெறியப்பட்ட நரசிம்ம தாண்டவத்தில் இருப்பதும், கடவுளைக் கவசமாக வைத்துக்கொண்டு மாற்றுக் கருத்தை ஒடுக்குகிற சர்வாதிகாரம்தான்.

எல்லா மதங்களிலும் எதிர்க்கருத்தாளர்களை ஒடுக்குவதே நீதி என்ற போதனை இருப்பதாகவே தெரிகிறது.

கிறிஸ்துவ பைபிள் கதை (பழைய ஏற்பாடு) நூலில், “கடவுளைப் பழிக்கிறவன் பாவத்தைச் சுமக்கிறான்” என்ற போதனை இருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்ற போதனையும் இருக்கிறதே. கடந்த நூற்றாண்டுகளில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது என்ற உண்மைகளைச் சொன்ன கலிலியோ உள்ளிட்ட அறிவியலாளர்கள் செய்த ‘பாவ’த்துக்காகத் திருச்சபைகளால் தரப்பட்டது மரணச் சம்பளம் அல்லவா!

அண்மையில் ஸ்பெயின் நாட்டில் லூசியா கேரம் என்ற பெண் துறவி பைபிள் கதைக்கு மாறாக, மேரிக்கும் ஜோசப்புக்கும் இயற்கையான உறவின் மூலமாகத்தான் ஏசு பிறந்திருக்க முடியும் என்று வாதிட்ட ‘பாவ’த்துக்கும் அதே சம்பளம் தரப்படும் என்று அச்சுறுத்தல்கள் கிளம்பின.

சில ஆண்டுகளுக்கு முன் முகமது நபி குறித்து ஒரு டென்மார்க் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வந்தபோது, அவ்வாறு சித்திரித்த ஓவியரின் சமூகப் பொறுப்பு பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு மாறாக எவ்வளவு பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது!

சிறுமி மலாலா பெண் குழந்தைகளின் கல்விச் சுதந்திரத்தை வலியுறுத்தித் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காகக் கழுத்தில் பாய்ச்சப்பட்ட தோட்டாவில் இருந்தது இஸ்லாம் மறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கிற கும்பலின் மதவெறி.

தமிழகத்திலேயேகூட நாத்திகக் கருத்துகள் பேசியதற்காக ஃபாரூக் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

மானுடத்தின் மீது ரத்தக்கறை படியச் செய்திருக்கிற இப்படிப்பட்ட பல தாக்குதல்கள் கருத்துரிமைமீது தொடுக்கப்பட்டிருக்கின்றன, தொடர்ந்து தொடுக்கப்படுகின்றன.

ஆழ்மனதில் ஊறிய அணுகுமுறை?

கௌரி லங்கேஷ்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்படுகிறபோது, அது சிந்தனையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்களைத் தாண்டி ஏன் பெரும்பகுதி மக்களின் கொந்தளிப்பாக மாறுவதில்லை? இக்கேள்வியின் பின்னணியில், மாற்றுக் கருத்துகளை வன்முறையால் ஒடுக்குவதைப் போற்றுகிற, தலைமுறை தலைமுறையாகச் சிறு வயதிலிருந்தே புகுத்தப்பட்டு வருகிற கோட்பாடுகள் இருக்கின்றன.

ஆகவேதான், இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கிறபோது, மனசாட்சியுள்ள சில இயக்கங்கள், அமைப்புகள் தவிர்த்து ஆன்மிகப் பீடங்களாகவே இருக்கிற அதிகாரபூர்வ மத நிறுவனங்கள் வெளிப்படையாகக் கண்டிக்கவோ, குற்றவாளிகளைத் தனிமைப்படுத்தவோ முன்வருவதில்லை. மிஞ்சிமிஞ்சிப் போனால், இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு எங்கள் மத மறைகளில் அனுமதி இல்லை என்று மென்மையாக விளக்கம் தருவதோடு ஒதுங்கிக் கொள்வார்கள்.

மாற்றுக் கருத்தாளர்களை வக்கிரமான முறையில் அவமானப்படுத்துவதும் ஒரு வன்முறைதான். அவர்களது குடும்பங்களை வம்புக்கு இழுப்பது இன்னொரு வன்முறை. அதுவும் பெண்ணாக இருந்துவிட்டால், மிகக் கோரமான முறையில் இழிவுபடுத்தும் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கிவிடுவார்கள். கௌரி படுகொலை பற்றிக்கூட, நாடு முழுவதும் சமூக வலைதளங்களில், அது அவரது அந்தரங்க வாழ்க்கை தொடர்பான மோதலில் நடந்ததாகத் தெரிகிறது என்று கூறி, கருத்துரிமை பற்றிய விவாதத்தையே கடத்திவிட முயன்றார்கள்.

இங்கே கருத்துச் சுதந்திரம் கருவறுக்கப்படுவதை நியாயப்படுத்தும் இன்னொரு உத்தி, தாக்கப்பட்டவர் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறினார் என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்வது. ஏழை - பணக்காரர் என்பது விதி வசத்தால் வந்ததல்ல, பொருளாதார வளங்களில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும், சாதிய வரப்புகள் தகர்க்கப்பட வேண்டும், பெண்ணின் சிறகுகள் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும், கல்விக்கான வாசல்கள் எல்லோருக்கும் திறந்துவிடப்பட வேண்டும், கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குரல்கொடுப்போரை, அதற்கெல்லாம் எதிராக இங்கே எப்படிப்பட்ட அரசியல்-சமூகக் கட்டமைப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவோரை உடனே இந்துகளின் விரோதிகள் என்று கூசாமல் முத்திரை குத்துவார்கள். அப்படியானால் இந்தச் சிந்தனைகளெல்லாம் இந்து மதத்துக்கு எதிரான சிந்தனைகளா, இந்து மதம் இந்தப் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்றுதான் சொல்கிறதா என்று கேட்டால், இந்துகள் தாக்கப்பட்டபோது ஏன் கண்டிக்கவில்லை என்று அப்போதும் கூசாமல் கேட்பார்கள். கண்டித்திருப்பது பற்றி எடுத்துச்சொன்னால் வேறு மாதிரியாக மழுப்புவார்கள். ஆனால், மாற்றுக் கருத்துகள் மதத்துக்கு விரோதமானவை என்ற கருத்தை நுட்பமாகப் பரப்புவதில் முனைப்போடு இருப்பார்கள்.

களம் இப்படியாக இருக்கிற சூழலில்தான் கருத்துச் சுதந்திரம் வெறும் லட்சியாகவே இருந்துவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. 1948இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கப்பட்ட உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 19ஆவது உரை இவ்வாறு கூறுகிறது: “ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது. இந்த உரிமை தலையீடுகள் இல்லாமல் கருத்துகளைக் கொள்வதற்கான சுதந்திரத்தையும், எந்த வழியிலும், எல்லைத் தடைகளின்றி தகவல்களையும் கருத்துகளையும் பெறுவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதாகும்.”

உள்ளூரிலேயே கருத்துச் சுதந்திரம் இந்தப் பாடு படுகிறபோது உலக அளவிலான இந்தப் பிரகடன நோக்கம் நிறைவேறுவது எப்படி?

இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை 19, பேச்சுச் சுதந்திரத்தையும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அடிப்படைச் சுதந்திரங்களில் ஒன்றாக உறுதிப்படுத்துகிறது. அப்படி உறுதிப்பட்டுத்தப்பட்டிருப்பதை இத்தகைய தாக்குதல்கள் வருகிறபோது மட்டுமே நினைவுகூர்கிறோம். இந்தச் சுதந்திரம் பற்றி, தங்களுக்கு வன்முறை உரிமம் கொடுக்கப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகக் கொலைக் கருவிகளை எடுக்கிற கும்பல்களுக்கும் நாட்டின் குடிமக்களுக்கும் உரத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அடக்குமுறையை ஏவிவிட வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தாலோ என்னவோ இந்த உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள அரசு தயாராக இல்லை.

கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது என்பது ஏதோ சம்பந்தப்பட்ட சிந்தனையாளர், எழுத்தாளர், செயல்பாட்டாளரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல. அவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும் உரிமை மறுக்கப்படுகிறது என்ற பிரச்னை மட்டுமல்ல. அடிப்படையில் இது மக்களின் கருத்தறியும் உரிமைக்கே எதிரானது. யார் என்ன கருத்தைக் கூறுகிறார்கள் என்பதைக் கேட்கவும், எது சரியானது என்று முடிவு செய்யவும் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தை வெட்டுகிற மூர்க்கமும் இந்த வன்முறைகளில் இருக்கிறது.

அரசு இது பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்பதால் கருத்துச் சுதந்திரத்துக்காக வாதாடுவோர், போராடுவோர் தோள்களில்தான் சமூக வெளியில் சென்று மக்களின் கருத்தறியும் உரிமை பற்றி உணர்த்துகிற கடமைப் பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய கௌரியின் பயணம் அவரது மரணத்தால் அறுந்துவிடாமல் தொடரச் செய்வோம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். ‘தீக்கதிர்’ இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon