மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

இர்மா: கொள்ளையில் ஈடுபட்ட 32 பேர் கைது!

இர்மா: கொள்ளையில் ஈடுபட்ட 32 பேர் கைது!

ஃபுளோரிடாவில் இர்மா புயல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைத் தாக்கியுள்ளது. இதனால் அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தற்போது இந்தப் புயல் வலுவிழந்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இர்மா காரணமாக ஃபுளோரிடாவில் ஐந்து பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், புயல் காரணமாகப் பலியானவர்களின் தெளிவான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே புயலைப் பயன்படுத்தி பலர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒர்லாண்டோ பகுதியில் உள்ள விளையாட்டு பொருள்கள் கடையில் புகுந்து துப்பாக்கியைக் காட்டி ஒரு கும்பல் திருடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஒவ்வொருவராக உள்ளே செல்வதும், கையில் கிடைத்த அட்டைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியேறுவது என அனைத்துக் காட்சிகளும் அங்கிருந்த கேரமாவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் வீடு ஒன்றில் திருட முயன்ற ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 32 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் மியாமி நகரில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

சமீபத்தில் டெக்ஸாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியபோதுகூட இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon