மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கடன் மோசடி: ஜெய்பீ நிறுவனத்துக்கு அபராதம்!

கடன் மோசடி: ஜெய்பீ நிறுவனத்துக்கு அபராதம்!

கடன் பெற்று மோசடி செய்ததாக ஜெய்பீ நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் ரூ.2,000 கோடி அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களில் ஒன்றான ஜெய்பீ இன்ஃபோடெக் லிமிடெட், அதற்கு நிதியுதவி வழங்கிய ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ.526 கோடி மோசடி செய்ததாகக் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அலகாபாத் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடுகளை வாங்கியவர்கள் தங்களது பணத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று முறையிட்டனர். மேலும், இந்த நிறுவனத்தால் பல்வேறு பகுதிகளில் 27 திட்டங்களில் உருவாக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்த சுமார் 30,000 பேரின் பணத்தை காப்பாற்றித் தருமாறும் முறையிட்டனர்.

ஏற்கெனவே கடனில் சிக்கித்தவிக்கும் இந்த நிறுவனத்தின் மீது இந்த வழக்கில் விதிக்கப்படும் அபராதத் தொகையில் வீடுகளை வாங்க முன்பதிவு செய்வோருக்கு எவ்வித தொகையும் கிடைக்காது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வழக்கில் ஜெய்பீ நிறுவனம் வருகிற அக்டோபர் 27ஆம் தேதிக்குள் ரூ.2,000 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களும் பிற இயக்குநர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திடம் வீடு வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கான தொகை பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon