மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சிறப்புக் கட்டுரை: தமிழ்ல எப்ப இப்படி வரும்? - கேபிள் சங்கர்

சிறப்புக் கட்டுரை: தமிழ்ல எப்ப இப்படி வரும்? - கேபிள் சங்கர்

சமீபத்தில் ஒரு மலையாளப் படத்தை பார்த்துவிட்டு வந்தபோது என்னுள் எழுந்த கேள்விதான் இது. ஏன் மலையாளத்தில் மட்டும் நல்ல படங்கள் வருகின்றன? அதே படங்களை இங்கே தமிழில் ரீமேக் செய்யப்படும்போது அப்படங்கள் தோல்வியடைவதுடன் ஒரிஜினலில் சிலாகிக்கப்பட்ட பல விஷயங்கள் இங்கே எடுபடுவதில்லையே என்பது போன்ற ஆதங்கங்கள் என்னுள் நிறையவே இருக்கின்றன. பகத் ஃபாசில், நிவின் பாலி போன்ற மெயின் ஸ்ட்ரீம் நடிகர்கள் அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட்டில் டெம்ப்ளேட் மசாலா படங்களில் நடித்துவிட்டுப் போகலாம். ஆனால், அப்படியில்லாமல் மெனக்கெடுகிறார்கள். கமர்ஷியல் அல்லாத கதைக்களன்களைத் தெரிந்தெடுத்து, அவை கமர்ஷியல் வெற்றியடையப் பாடுபடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

22 ஃபீமேல் கோட்டயம் என்றொரு படத்தில் பகத் ஃபாசில் பிம்ப் கேரக்டரில் நடித்திருப்பார். அதே பகத்தின் மகேஷிண்டே பிரதிகாரமாகட்டும், சமீபத்திய ஹிட்டான Thondimuthalum Driksakshiyum படத்தில் வரும் திருடன் கேரக்டராகட்டும் தமிழில் எந்த ஹீரோக்களாவது செய்வார்களா என்று யோசித்தால் யாரும் தென்படவே மாட்டேன் என்கிறார்கள்.

மலையாளப் படங்களில் மிக இயல்பாய் பேசப்படும் பல விஷயங்கள் நம்மூர் சினிமாவில் சாத்தியமேயில்லாதவை. முக்கியமாய் சாதி, அரசியல், பஞ்ச் டயலாகில்லாமலேயே அரசியல்வாதிகளைக் கலாய்த்தெடுக்கும் வசனங்கள், மிக இயல்பான நகைச்சுவை இவையெல்லாவுமே தமிழ்ப்படுத்தப்படும்போது இயல்பாக இருப்பதில்லை.

சரி... நல்ல படங்கள் என்றால் என்ன? இன்டர்நெட்டில் பாராட்டுப்பெறும் படங்கள் மட்டுமா அல்லது அறிவு சார்ந்த படைப்புகளைக் கொண்டாடித் தன்னை அறிவாளியாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கும்பல் ஆதரிக்கும் படமா என்று கேட்பீர்கள். உண்மையில் தமிழில் விஜய், அஜித், தெலுங்கு அல்லு அர்ஜுன் போன்றோரின் படங்களுக்கு ஏகப்பட்ட வியாபாரம் கேரள மார்க்கெட்டில் உண்டு. பெரிய ஓப்பனிங் உட்பட. ஆனால், அதே நேரத்தில் நல்ல கதைகளோடு, உணர்வுபூர்வமாகச் சொல்லப்படும் படங்களின் வெற்றியும் அதே அளவில் உள்ளதுதான் ஆச்சர்யம். மேலே சொன்ன நல்ல படங்கள் ஓடிய ஓட்டத்தைவிட அதிகம் ஓடி வசூல் செய்த படம் ‘புலி முருகன்’தான் எனும்போது, பெரும்பான்மை ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்ட் ஒன்றே முக்கியம் என்பது தெரிகிறது. நல்ல தரமான உள்ளடக்கத்தை அளிப்பதற்கான தளமும், களமும் அவர்களுடைய சினிமா உலகில் இருப்பதும், அதை வெற்றி பெறச் செய்யும் வியாபாரமும் அங்கே இருப்பதால்தான் நல்ல படங்கள் வருவதும் சாத்தியப்படுகிறது.

ரசனையில் மாற்றம் இருக்கிறதா?

மலையாளப் படமென்றேலே நல்ல படம் என்பதெல்லாம் இல்லை. அங்கேயும் மொக்கைப் படங்கள் வரத்தான் செய்கிறது. ‘நீங்க எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் பாக்குறீங்க. அதே படத்தை தமிழ்ல எடுத்தா விமர்சனம் செய்கிறவர்களின் வாயில் விழுந்து எழுந்து வரதுக்குள்ள விடிஞ்சிரும்’ என்பவர்களுக்கு நிச்சயம் நம்மூரில் அம்மாதிரியான ரசனை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது என்றே சொல்வேன். அது மட்டுமில்லாமல் இம்மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் கமர்ஷியலாய் வெற்றி பெறும்போதுதான் மேலும் பல நல்ல முயற்சிகள் வரும். ஆனால், தமிழில் வரும் பெரும்பாலான நல்ல படங்களில் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் மாறி மாறி காசு கொடுத்து பாராட்டிக்கொண்ட படங்களின் எண்ணிக்கைதான் அதிகமே தவிர, நிஜ ஹிட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வாரத்துக்கு நான்கு படங்களுக்குக் குறையாமல் வெளிவரும் கசகசப்பு. அத்தனை படங்களுக்குமான அரங்குகள் இல்லாமை. அப்படியே அரங்குகள் கிடைத்தாலும் மக்களைத் தியேட்டருக்கு அழைத்துவரும் திறன் இல்லாமை போன்ற பல இல்லாமைகள் ஒருபுறம். இன்னொரு புறம் நல்ல படமோ, கெட்ட படமோ... தங்களின் விளம்பரம் மற்றும் விநியோக நெட்வொர்க்கின் பலத்தை வைத்து அனைத்துத் திரையரங்குகளையும் ஆக்கிரமித்து ஒரு வாரம் பூராவும் அந்த படத்தைத் தவிர வேறு படங்களுக்கு இடமேயில்லாமல் கட்டாயப்படுத்தி, இதைத்தான் பார்த்தாக வேண்டுமென்று ரசிகர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வேண்டாம்டா உங்க சங்காத்தமே என்று கடுப்பாகி விலகியிருப்பதன் காரணம் இதுதான் என்றே தோன்றுகிறது.

ஓரிரு நல்ல தமிழ் படங்கள், வெளிவந்து கமர்ஷியல் வெற்றி பெற அதீத மார்க்கெட்டிங் செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஊரே ஆஹா ஓஹோ என்று கொண்டாடிய பல படங்கள் அதன் தயாரிப்புச் செலவைக்கூட எடுக்க முடியாமல் பரிதாமாய் வசூல் செய்தன என்பதை வெளியே சொல்லக்கூட முடியாது.

எது தரமான படம்?

தரமான படங்கள் எனும்போதே அதற்கென தரச் சான்றிதழ் இருக்கிறதா? அவரவர் ரசனைக்கேற்ப தரம் வித்தியாசமாகத்தான் இருக்கும். நீங்கள் சொல்லும் படங்கள் மட்டுமே தரமானதா என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஊரே கொண்டாடிய படங்களை அத்தனை விமர்சனத்துக்கு அப்புறம் போய்ப் பார்த்து, என்னத்துக்கு இந்தப் படத்தை இப்படிக் கொண்டாடினார்கள் என்று சந்தேகத்துடனே வெளியே வந்து, சரி எல்லாரும் கொண்டாடித் தொலைச்சிட்டாங்க... நாம பாராட்டாம விட்டோம்னா நம்மளை ஆட்டத்திலிருந்து வெளியேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் ‘வாவ்.. காவியம்’ என்று சொல்கிறவர்கள்தான் அதிகம்.

என்னைப் பொறுத்தவரை மசாலா படமோ, காவியப் படமோ, படம் பார்த்துவிட்டு, அட நல்லாருக்கே என்று ஒரு சின்ன சந்தோஷத்தையோ, அல்லது அதெப்படி இப்படிச் சொல்லலாம் என்ற விவாதத்தையோ ஏற்படுத்தினால்கூட அது நல்ல படங்களில் சேரும். ஆனால், அப்படியான படங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் ஃபேக்கான படங்களை இயக்குநர்களின் பெயருக்காகப் பாராட்டும் விமர்சனத்தால் காண்டாகிப்போன ரசிகன், நிஜமாகவே நல்ல படம் என்று போற்றப்படும்போது நம்பிக்கையில்லாமல் தியேட்டருக்குப் போக விரும்பாமல் அமைதி காத்துவிடுகிறான். நஷ்டம் யாருக்கு?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். தொட்டால் தொடரும் படத்தை இயக்கியிருக்கிறார். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon