மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது!

குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது!

‘இளைஞர்களை குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் சிறு தவறுகள் செய்துவிடும் இளைஞர்களுக்கு எதிராக இளையோர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கிரிமினல்கள் போல் நடத்தக் கூடாது. அதேபோல், சட்ட ஒழுங்கு பிரச்னைகளைக் கையாளும்போது அளவுக்கதிமான படைகளை உபயோகப்படுத்துவதையும் பாதுகாப்புப் படையினர் தவிர்க்க வேண்டும். யாரோ சிலரின் இயக்குதலுக்கு இளைஞர்கள் ஆளாகக் கூடாது என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். கல் வீச்சு போன்ற சம்பவங்களில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். பிரதமர் உட்பட அனைவரும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறோம்.

காஷ்மீர் மக்கள் தங்களின் எதிர்காலத்தைக் கடின உழைப்பு மூலம் செதுக்க வேண்டும். பல தலைமுறைகளைப் பயங்கரவாதிகள் அழித்துவிட்டனர். மேலும், ஒரு தலைமுறையினரை பயங்கரவாதிகள் அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில தவறுகள் செய்யும் இளைஞர்களை கிரிமினல்கள் போல நடத்த வேண்டாம் என்று பாதுகாப்புப் படையைக் கேட்டுக்கொண்டுள்ளேன். பயங்கரவாதிகளுக்குரிய பதிலடி கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon