மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ப.சிங்காரம்: தமிழ் நாவல் கலையின் பெருமிதம்!

ப.சிங்காரம்: தமிழ் நாவல் கலையின் பெருமிதம்!

தமிழ் நாவல்களைத் தீவிரமாகத் தேடிப் படிக்கும் வாசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிப்பவை ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரு நாவல்கள். இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கும் ப.சிங்காரத்தின் பிறந்த தினம் (செப்டம்பர் 12) இன்று.

எழுத்தாளர் ப.சிங்காரம் 1920இல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தார். 1938ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருக்கும் மேடான் நகரில் ‘மார்க்கா’ என்றழைக்கப்படும் வட்டிக்கடையில் வேலை செய்துள்ளார். உலகப்போர் நடந்த (1939-1945) ஆண்டுகளில் ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, நேரடியாக ரத்தமும் சதையுமாக கண்ணுற்றுள்ளார். அந்த யுத்த சூழலில் பிரசவத்தின்போது தன் மனைவியைக் குழந்தையுடன் பறிகொடுத்து, அந்த வடுவிலிருந்து மீண்டு இத்தகைய படைப்புகளைத் தந்துள்ளார் என்பது அவர்தம் சிறப்பை உணர்த்துவன.

1946ஆம் வருடம் இந்தியாவுக்குத் திரும்பி, மதுரை தினத்தந்தியில் செய்திப்பிரிவில் பணிக்குச் சேர்ந்தவர், 1950ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை தன் இந்தோனேஷிய, மலேய, பர்மா நாட்டின் பணிக்கால நினைவடுக்குகளில் இருந்து எழுதியுள்ளார். மறுமணம் செய்துகொள்ளாமல் தன் வாழ்நாள்களைச் சுமார் 50 ஆண்டுகள் மதுரை YMCA விடுதியில் (தினத்தந்தியில் வேலை பார்க்கும்போது) தனியே கழித்துள்ளார். தன் வாழ்நாள் சேமிப்பையும் தனக்கு வந்த சேமநல நிதி சுமார் 7 லட்சம் ரூபாயையும் பொதுவுக்கு எழுதி வைத்துவிட்டு தன் 77ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இவர் ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் நாவலையும் எழுதினார். 1962ஆம் ஆண்டு பெரும் தடைகளுக்கு இடையே இந்த நாவல் வெளிவந்தது. இந்த இரண்டு நாவல்களுமே அவற்றின்

மாறுபட்ட களத்துக்காகவும் புதுமைக்காகவும் இலக்கியவாதிகளால் வெகுவாக சிலாகிக்கப்படுபவை. இவரது கடைசிக் காலத்தில் சி.மோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேச பாண்டியன் போன்ற எழுத்தாளர்களுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இவரும் பாரதியை போன்றே வாழும் காலத்தில் புகழ் கிடைக்காத கலைஞனே.

ப.சிங்காரம் பற்றியும் அவர்தம் நாவல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள சி.மோகன், “தமிழ் நாவல் கலையின் பெருமிதம் ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது; அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது வாழ்க்கையே ஒரு சுவையான பல திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல் போன்று இருந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon