மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

2,500 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்!

2,500 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் நெட்வொர்க் சேவையில் போட்டியிட்டு வரும் ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் பிரிவிலும் போட்டியிடத் துணிந்துள்ளது. அதற்குப் போட்டியாக ரூ.2,500 விலையில் புதிய ஸ்மார்ட் போன்கள் தயாரித்து விற்பனை செய்யவிருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி கடந்த 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவையை அறிமுகம் செய்தார். வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் இலவசம் என்ற அறிவிப்புடன் இந்தச் சந்தையில் நுழைந்த ஜியோ, ஒரு வருடத்துக்குள் 13 கோடி வாடிக்கையாளர்களைத் தன் கைக்குள் வைத்துள்ளது. தற்போது தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலித்து வந்தாலும் அது ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை விட மிகமிகக் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஜியோ நிறுவனம் ரூ.1,500 செலுத்தி முன்பதிவு செய்தால் மூன்று மாதங்களில் இத்தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் கூறி புதிய மொபைல்போனை அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அதன்படி, ரூ.2,500 முதல் ரூ.2,700 வரையிலான விலையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும், இவை நான்கு அங்குல தொடுதிரையுடன், இரட்டை கேமிரா, 1 ஜி.பி. ரேம் வசதிகொண்ட 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மொபைல் குறித்த இறுதி அறிவிப்பு தீபாவளியன்று வெளியாகும் என்று அந்நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon