மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பதினேழு நாள் வாதம்!

 பதினேழு நாள் வாதம்!

எம்பெருமானாருக்கும் யக்ஞ மூர்த்திக்கும் இடையே வாதம் நிகழ்த்த நாள் குறிக்கப்பட்டது. நாளை வாதம் தொடங்குகிறது என்றால் இன்று இரவு வரை யக்ஞ மூர்த்தி தான் தனது சிஷ்யர்கள் மூலம் கொண்டுவந்த கிரந்தங்களை எல்லாம் புரட்டிக் கொண்டிருந்தார், பொதுத் தேர்வுக்கு முதல்நாள் இரவு வரை புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கும் மாணவரைப் போல.

பொழுது விடிந்தது. எம்பெருமானார் நிகழ்த்தப் போகும் வாத சாகசங்களை பார்ப்பதற்கு ஆவலாய் சூரியன் ஸ்ரீரங்கத்தை எட்டிப் பார்த்தது. காலையில் தனது வழக்கப்படி தன் மடத்தில் இருக்கும் ஆராதனப் பெருமாளான பேரருளாளப் பெருமாளுக்கு திருவாரதானங்களை முடித்துவிடு, தனது காலை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு தர்க்க மண்டபத்துக்கு வந்தார் ராமானுஜர்.

அனேகமாக ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இந்த தர்க்க போட்டி நடந்திருக்கும் என்று தெரிகிறது. ராமானுஜருக்கு முன்பாகவே யக்ஞ மூர்த்தி தனது சிஷ்யர்களோடு வாதம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். ராமானுஜர் வந்ததும் யக்ஞ மூர்த்தி அவரை வணங்கினார். ராமானுஜரும் பதில் வணக்கம் தெரிவித்தார்.

வாதம் என்றால் அதன் முடிவில் நீ ஜெயித்தால் என்ன தருவாய், நான் ஜெயித்தால் என்ன தருவேன் என்ற நிபந்தனைகள் முக்கிய விஷயமாக இருக்கும். அந்த வாய்ப்பை யக்ஞ மூர்த்திக்கே அளித்தார் எம்பெருமானாரான ராமானுஜர்.

யக்ஞ மூர்த்தி எழுந்து, "இந்த வாதத்தில் நான் ஜெயித்தால் எம்பெருமானார் அத்வைதியாகி விட வேண்டும். அது நிச்சயம் நடக்கும், ஒருவேளை நான் தோற்றால், எம்பெருமானார் திருநாமத்தை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன். எம்பெருமானரின் பாத ரட்சைகளை என் தலையில் ஏந்திக் கொள்கிறேன்’’ என்று சவால் விட்டார் யக்ஞ மூர்த்தி.

ராமானுஜரிடம் கேட்டார்கள். சிரித்தார். " எம்பெருமானின் புகழைப் பரப்புகிறேன் . விசிஷ்டாத் வைதத்தை பரப்புகிறேன். உம்மிடம் நான் தோற்றால், இனி எந்த கிரந்தத்தையும் தொட மாட்டேன்’’ என்றார்.

தர்க்க மண்டபம் ஸ்ரீரங்கத்தின் ஆன்றோர்களால் நிரம்பியது. யக்ஞ மூர்த்தி தான் முதலில் ஆரம்பித்தார்.

மாயாவாதத்தை முன்னிறுத்தி அவர் தன் முதல் கட்ட வாதங்களை வைக்க... ராமானுஜர் அவற்றை எதிர்த்து மாயாவாதமே ஒரு மாயாவதம் என்று வாதாடினார். எல்லாம் பொய் என்பதே பொய் என்று வேதங்களில் பிரம்ம சூத்திரத்தில் இருந்தும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்தும் வாதங்களை அடுக்கினார்.

யக்ஞ மூர்த்தியும் சாதாரணமான சந்நியாசி அல்ல. அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிடதங்களில் ஊறியவர். ராமானுஜரும் அவரோடு வாதிடுவதை போகப் போக விரும்பினார். இரண்டு யானைகள் நேருக்கு நேர் நின்று எப்படி மோதிக் கொள்ளூமோ அப்படி இருந்தது யக்ஞ மூர்த்தியும், ராமானுஜரும் வாதங்களால் மோதிக் கொள்ளும் காட்சி என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள் குருபரம்பரை ஆசாரியர்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல பதினேழு நாட்கள் இந்த வாதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களாக வந்திருந்த ஆசாரியர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் பலப்பல புதிய சங்கதிகள் கிடைத்தன. ராமானுஜரின் தர்க்க நிகழ்ச்சி நடக்கிறது என்றால்…நீண்ட தொலைவில் இருந்து எல்லாம் பல்வேறு வைணவ சிஷ்யர்களும் மாற்றுக் கொள்கை கொண்டவர்களும் அணி அணியாய் திரள்வார்கள். ஏனெனில் ராமானுஜர் தர்க்க நிகழ்ச்சிகளில் தனது கருத்துகளை ஆணித் தரமாக எடுத்து வைப்பார்.

யாதவ பிரகாசருக்கு நாராயணின் புன்னகை செந்தாமரை போல இருக்கிறது என்று எப்படி உண்மையான அர்த்தங்களை எடுத்து வைத்தாரோ… அதுபோல, பல கற்பிதங்களை தவிடுபொடியாக்கி, உண்மைகளை தன் வாதங்களால் உறுதியுடன் நிலைநாட்டுவார் ராமானுஜர். இந்த நம்பிக்கையால் பலரும் அரங்கத்தில் திரண்டனர்.

பதினேழு நாட்களும் கிட்டத்தட்ட மிகப் பெரும்பாலானவற்றை விவாதித்து முடித்த நிலையில், நாளைதான் இறுதிவாதம்.

18 வது நாள்…

அன்று இரவு ராமானுஜர் தன் சேரன் மடத்தில் அமர்ந்திருந்தார்,

மானசீகமாக பேரருளாளப் பெருமாளிடம் பேசும் வழக்கம் கொண்டவர் ராமானுஜர். மறுநாள்தான் கடைசி நாள் வாதம்.இது நாள் வரை நடந்த வாதங்களை வைத்து பார்க்கும்போது, , யக்ஞ மூர்த்தியும் நன்றாக வாதாடியிருக்கிறார் என்றே பெருமாளிடம் தெரிவித்தார் ராமானுஜர்.

நாளை காலை தனது ஆசாரியரான ஆளவந்தாரின் மாயாவாத மறுப்புகளை தனது பாணியில் எடுத்து வைத்து வாதாட திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். அப்படியே உறங்கிப் போனார்.

மறுநாள் பதினெட்டாம் நாள்… மாயாவாதம் தகர்ந்ததா?

காத்திருந்து பார்ப்போம்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான டாக்டர் ஜெகத்ரட்சகன் தனது வாதங்களை எல்லாம் பாசுரங்களின் அடிப்படையிலேயே முன் வைப்பார். மேடையில் அவர் முன் வைக்கும் ஒவ்வொரு வாதமும், திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அதனாலேயே அது சிறக்கும்!

பதினெட்டாம் நாள் தர்க்கத்தில் என்ன நடக்கும் என்று அன்று அரங்கத்து ஆன்றோர்கள் காத்திருந்தது போல நாம் எல்லாரும் காத்திருப்போம்!

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon