மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க ஒத்துழைப்போம்!

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க ஒத்துழைப்போம்!

“நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களின் பாதிப்பை விளக்கி ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவசரச் சட்ட வரைவுடன் அதிகாரிகள் டெல்லி செல்லவுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என்பது இக்கட்சிகள் முன்வைக்கும் வாதம். கடந்த மாதம் திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கட்சிகள் கலந்துகொண்டன. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் அடிக்கடி டெல்லி சென்று நீட் தேர்வு விலக்குக்கு வலியுறுத்திவருகின்றனர். கடந்த வாரம் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவைச் சந்தித்தால், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்குத் தற்காலிக விலக்காவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட் 13) தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு என்பதே கிடையாது. ஆனால், நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால், ஓராண்டு காலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியும்.

அதுவும் குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த ஓராண்டு விலக்கு. அதுவும் விலக்கு வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதங்கள் வெகுவாக குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது தமிழக மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. நாளைக் காலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அவசர சட்டம் சமர்ப்பிக்கப்படும். இந்த ஓராண்டு விலக்கு தமிழக அரசின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலேயே தமிழக அரசும், மத்திய அரசும் கவனமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். .

இன்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அவசரச் சட்ட வரைவுடன் டெல்லி செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை மாலைக்குள் நீட் தேர்வு விலக்குக்கு, குடியரசு தலைவர் ஒப்புதலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

அடுத்ததுchevronRight icon