மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

முதலமைச்சர், அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்

முதலமைச்சர், அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாகக் கூறி தமிழக அரசு கபட நாடகம் நடத்தியுள்ளது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முதல்வர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், இன்று காலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்களிக்க, தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பளிக்கும்” என்று தெரிவித்ததைத் தொடர்ந்து அவசர சட்ட வரைவுடன் அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், “இது தமிழக அரசின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வு குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை திணித்து மத்திய அரசு சமூகநீதியைச் சாகடித்துள்ளது. நீட் தேர்வு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்துள்ளது. கூட்டாட்ச்சி என்று பேசிக்கொண்டே உதட்டில் ஒன்று, உள்ளத்தில் ஒன்று என்று வைத்து மத்திய அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனத்தை உச்சநீதிமன்றமே கடிந்துள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பப்படவில்லை. அந்த மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள், பாஜக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவருடன் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரம் முடிந்துபோன ஒன்று என்று தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம் என மத்திய – மாநில அரசுகள் கூறிவந்தது ஏமாற்று நாடகம் என நிரூபணமாகி விட்டது. எனவே அதிமுக எம்.பி-க்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக கபட நாடகம் நடத்தி தமிழக மாணவர்களை ஏமாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பதவியை ராஜினாமா செய்ய அவராகவே முன்வர வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon