மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்கள்: விரட்டியடித்த அரசு!

குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்கள்: விரட்டியடித்த அரசு!

கோரக்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது எனச் செய்திகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்ட தலைநகரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவு செயல்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்.

இந்நிலையில்தான், ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வென்டிலேட்டர், அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 63 குழந்தைகள் ஆகிஸிஜன் இல்லாததால் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இன்று (ஆகஸ்ட் 13) உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த மருத்துவமனையில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் இல்லாததே காரணம் என்று தெரியவந்துள்ளது. ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எப்படி உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் போனது என்று ஆராய்ந்தால், உத்தரப் பிரதேச அரசும் மருத்துவமனை நிர்வாகமும் தங்கள் அலட்சியத்தால் அநியாயமாக 70 குழந்தைகளின் உயிருடன் விளையாடியிருப்பது தெரியவருகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏதோ ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை. கடந்த ஜூன் மாதம் ஆக்சிஜன் சிலிண்டரை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளி பெறப்பட்டது. இதில் ஒப்பந்த விதிகளின்படி சில மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த ஒப்பந்தக்காரர்களை விலக்க முடியவில்லை. அதே நேரத்தில், அகிலேஷ் அரசு ஒப்பந்தம் செய்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதித்யநாத் அரசு பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த மருத்துவமனை உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதையும் நிறுத்திவிட்டது.

உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனை விதிப்படி, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒரு மாதம்வரை கையிருப்பில் இருக்க வேண்டும். மருத்துவமனையின் கையிருப்பில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைந்து கடந்த ஜூலை மாதம் முதலே ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு ஆகஸ்ட் 4ஆம் தேதி அபாய கட்டத்தை அடைந்தது. வெறும் 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் குறைவாகவே கையிருப்பு இருந்ததால், மிக அவசரத் தேவைக்குத் தவிர ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. இது குறித்து சுகாதாரரத் துறை அமைச்சருக்கும், அந்த துறையின் செயலாளருக்கும் மருத்துவமனை நிர்வாகம் எழுத்து மூலமாகவும், நேரிலும் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஆதித்யநாத்திடமும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், ஆதித்யநாத்தும் மாநில நிர்வாகமும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டனர்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்துவதை நிறுத்தியதால், ஆகஸ்ட் 7ஆம் தேதி காலையில் இருந்தே அந்த மருத்துவமனையில், குழைந்தைகள் நல சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் உயிரிழப்பு தொடங்கிவிட்டது. கடந்த 5 நாட்களில் அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுவரை 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலான குழந்தைளின் மூளை ரத்த நாளம் வெடித்து கண், மூக்கு, வாய் வழியாக ரத்தம் வெளியேறித் துடிதுடித்து இறந்துள்ளார்கள். இதனால், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். உயிரிழந்த குழந்தைகளில் 17 குழந்தைகள் பிறந்து 10 நாட்கள்கூட ஆகாத பச்சிளம் குழந்தைகள் என்பது இதயத்தைப் பிழியும் சோகம். இதனால், இறந்த குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனயில் கூடியதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது. இதனால், பாதுகாப்புக்காக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்ததால், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வார்டை விட்டு வெளியேற்றியதாக 'தி டெலிகிராஃப்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது குழந்தையைப் பறிகொடுத்த அமித்சிங், "எனது குழந்தை பிரதிக்ஞா அநியாயமாகக் கொல்லப்பட்டாள். அவள் இறந்த செய்தி அறிவிக்கப்பட்டதும் நான் வளாகத்தை விட்டே துரத்தப்பட்டேன்” என்று கண்ணீருடன் கூறினார்.

குஷிநகரைச் சேர்ந்த விஜய்லால், "எனது மகள் பிறந்து 16 நாட்களுக்குள்ளாகவே இறந்துள்ளாள். போலீஸார், இறந்த எனது குழந்தையுடன் என்னை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி ரயில் நிலைத்தில் வீட்டுவிட்டு திரும்ப வரக்கூடாது. இதனால், நான் பயந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

நிலவரம் இப்படி இருக்க, மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாதது காரணம் அல்ல. சிகிச்சை பலனின்றியே குழந்தைகள் இறந்தார்கள் என்று உத்தரப் பிரதேச அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டது. ஆகஸ்ட் 11ல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகள் இறப்பைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 7இல் 9 குழந்தைகள், 8இல் - 12 குழந்தைகள், 9இல் - 9 குழந்தைகள், 10இல் - 23 குழந்தைகள், 11இல் - 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் மற்றொரு செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 10இல் 52 சிலிண்டர்களும் 11ல் 100 சிலிண்டர்களும் என மொத்தம் 200 சிலிண்டர்கள் வாங்கப்பட்டதாகத் தெரிவித்துளது.

குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளின் மரணத்த்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "ஆதித்தியநாத் அரசின் திறமையின்மையும், நிர்வாக சீர்கேடுகளுமே குழந்தைகள் உயிரிழந்ததற்குக் காரணம்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசு இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் கையிருப்பைப் பராமரிக்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் அனிதா பட்நாகர் ஜெயின் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள ஒன்பது அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 12 இதர முக்கிய மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் இருப்பை உறுதிசெய்யுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் ஆதித்யநாத், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதற்கு முன்பாகவே, நேற்று (ஆகஸ்ட் 12) காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் உயிரிழப்புக்கு, மாநில அரசின் அலட்சியமே காரணம். மருத்துவமனை நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டு உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், 63 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று,முதல்வர் ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon