மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மஞ்சு வாரியாரின் சதி: திலீப்

மஞ்சு வாரியாரின் சதி: திலீப்

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கொச்சினுக்குத் திரும்பிக்கொண்டிருந்த நடிகையைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பல்சர் சுனில், கைகாட்டிய அனைவரையும் கைது செய்துவிட்டது கேரளக் காவல்துறை. சந்தேகப்படும் நபர்களை கண்காணிப்பிலும், ஆதாரங்களை அழித்தவர்களின் போக்குகளைப் பதிவு செய்துகொண்டிருந்தது காவல்துறை.

மேலும், இரண்டு நபர்களை கைது செய்தால் நடிகை கடத்தல் வழக்கில் வெற்றி பெற்று விடலாம் என்று காவல்துறையினர் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இவ்வழக்கின் புதிய திருப்பமாக மஞ்சு வாரியாரின் சதியால் நான் மாட்டிக் கொண்டேன் என திலீப் புதிதாக ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து திலீப், கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் திலீப் மீண்டும் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்குத் தனது தரப்பு நியாயங்களைச் சரியாக கூறாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வக்கீலை மாற்ற முடிவு செய்தார்.

அதன்படி திலீப் சார்பில் ஐகோர்ட்டில் ஆஜராக பிரபல வக்கீல் ராமன் பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர் திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பல்வேறு தகவல்களை திலீப் கூறி உள்ளார்.

அந்த மனுவில், “நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறி உள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரைச் சந்தித்ததும் கிடையாது. ஆனால், போலீஸார் வேண்டுமென்றே அவரை எனக்குத் தெரியும் என்று கூறி உள்ளனர். இதற்கு என் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியாரின் சதி உள்ளது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு மறுநாள், மலையாள நடிகர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மஞ்சு வாரியார், என்னை இந்த குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தார். இதுபற்றி நான் போலீஸாரிடம் கூறி உள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்தபோது, மஞ்சு வாரியார் பற்றியும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் பற்றியும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தேன். மஞ்சு வாரியாருக்கும் ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு பற்றி கூறியபோது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த கேமராக்களை அணைத்துவிட்டார்.

இந்தச் சதியில் என்னை வேண்டுமென்றே சிக்கவைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக் கொண்டேன்” என அந்த புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளதாக மலையாளப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு வருகிற 18ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon