மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

ஹஜ் பயணம்: சவுதிக்குப் புறப்பட்டது முதல் குழு!

ஹஜ் பயணம்: சவுதிக்குப் புறப்பட்டது முதல் குழு!

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கான முதல் குழு இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை புறப்பட்டுச் சென்றுள்ளது,

இஸ்லாத்தின் அடிப்படையான ஐந்து கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் என்னும் புனிதப்பயணம் மேற்கொள்ளுதல். அதன்படி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்குச் சென்று வருவதுண்டு. இந்தியாவில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் இன்று ஆகஸ்ட் 13 தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 3,468 பேர் ஹஜ் பயணம் செல்லத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எளிதில் பயணம் மேற்கொள்வதற்காகத் தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்துள்ளது.

அதன்படி ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காகச் சென்னையில் இருந்து சவுதிக்கு 11 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், விமான நிலையத்தின் மூன்றாவது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் இன்று காலை 5 மணிக்குச் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 221 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர். இவர்களைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஒன்பது நாள்களுக்கு நாள்தோறும் 300 பயணிகள் வீதம் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon