மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

நீட் விவகாரம்: கமல் கருத்து!

நீட் விவகாரம்: கமல் கருத்து!

‘நீட் விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று நடிகர் கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். அரசாங்கம் செயல்படவில்லை என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் அவர் பதிவிட்டுவருவது ஆட்சியாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்திவருவதால் அவர்களும் கமலுக்குப் பதில் அளித்து வருகின்றனர்

இந்த நிலையில், ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது. தமிழக அரசு விலக்கு வேண்டுமென அவசரச் சட்டம் இயற்றினால் மட்டும் மத்திய அரசு, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளித்து ஆதரவு அளிக்கும்’ என மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்ட வரைவு நாளை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளைப் பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் ரகசியக் கூட்டு இருப்பதாக பல அரசியல் தலைவர்களும் கூறிவரும் நிலையில், நடிகர் கமல் இது தொடர்பாக வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon