மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

தணிக்கைக் குழு தலைமை மாற்றம் எதிரொலி!

தணிக்கைக் குழு தலைமை மாற்றம் எதிரொலி!

மத்தியத் திரைப்பட தணிக்கைக் குழுவில் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பஹ்லாஜ் நிஹாலனிக்கு பதிலாக பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மத்திய தணிக்கைக் குழுவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து வித்யா பாலன், கௌதமி ஆகியோர்களும் தணிக்கைக் குழுவில் புதிதாக இணைத்துள்ளனர். இந்த மாற்றத்தின் விளைவாக பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, " நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இந்த மாற்றம் எந்த மாதிரியான பிரதிபலிப்பை எங்கள் மீது ஏற்படுத்தப் போகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. தணிக்கைக் குழு கதைக் கருவை மட்டுமே பார்த்து தணிக்கை செய்கிறது. ஆனால் எந்த கண்ணோட்டத்தில் அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் பார்ப்பதில்லை. `மூன்றாம் பிறை' போன்ற பல படங்கள் A சான்றிதழ் பெற்றதற்கு இந்த கண்ணோட்டமே காரணம். எனது ‘நீர் பறவை’ திரைப்படத்திற்கும் பல இடர்பாடுகளை தணிக்கைக் குழுவிடம் இருந்து நான் சந்தித்தேன். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களிடமிருந்து நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 இல் வெளியான ‘தமிழ் படம்’ திரைப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தணிக்கை அதிகாரிகள் மாற்றம் பற்றி கூறுகையில், "புதிதாக நியமிக்கப்பட்டவர் பழைய தலைமை பொறுப்பாளர் போன்று இருக்க மாட்டார் என நம்புகிறேன். இந்தியாவில் பலதரப்பட்ட சமூகங்களையும், பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எல்லா விஷயத்திலும் ஒவ்வொரு கண்ணோட்டம் வேறுபடும். நீதி மன்றம் கூட திரைப்படத்தைப் பார்த்து விட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கத்தான் உரிமை கொடுத்திருக்கிறது. படத்தின் காட்சிகளை கட் செய்வதற்கு அல்ல. புதிதாக வந்துள்ள பிரசூன் ஜோஷி விளம்பர துறையில் இருந்து வந்தவர். எனவே அவர் உயர்ந்த சிந்தனையில் தான் பார்ப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்றவைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அறிவழகன் கூறுகையில், "எனது `குற்றம் 23' திரைப்படத்தில் செயற்கை கருத்தரித்தல் போன்ற கருத்துக்களால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக தணிக்கைக் குழுவினர் தெரிவித்தனர். நான் அதற்கு 18 வயதினர்கள் இத்திரைப்படத்தில் வரும் பிரச்சனைகளை பார்த்து கவனமாக இருப்பார்கள் என்றேன். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. புதிதாக வந்திருப்பவர் எல்லாவற்றையும் சரியான கண்ணோட்டத்தில் பார்த்து தணிக்கை செய்வார்கள் என நான் நம்புகிறேன்" என்றார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணீதரன் கூறுகையில், "திரைப்பட தணிக்கை குழுவை மக்களே விமர்சிக்கின்றனர். தணிக்கைக் குழு குறுகிய பார்வையில் தான் படத்தை அணுகுகிறது. கலாச்சாரத்தைப் பற்றிய அக்கறை எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

மத்திய திரைப்பட தணிக்கைக் குழு பற்றி பலதரபட்ட கருத்துக்கள் பரவி வரும் நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தணிக்கை அதிகாரிகள் நடுநிலையாளராகவும், கருத்து சுதந்திரத்திற்கு அனுமதி அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே இயக்குநர்களின் பார்வையாக இருக்கிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon