மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

காரில் தீ: ஒருவர் பலி!

காரில் தீ: ஒருவர் பலி!

கோவை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போதெல்லாம் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைக்காட்டிலும் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதுதான் அதிகரித்து வருகிறது. நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை கர்நாடகா அரசு பேருந்து சென்னையில் தீப்பிடித்து எரிந்தது. இதுபோன்று இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி கோவை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்குமார், ராக்கி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கர்நாடகாவிலிருந்து கேரளாவில் உள்ள மனைவி ஆஷாவின் உறவினர் வீட்டுக்குக் குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவு கோவை L&T பைபாஸ் டோல்கேட் அருகே சென்று கொண்டிருக்கும்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையறிந்து திலீப் காரை நிறுத்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கீழே இறங்க சொல்லியிருக்கிறார். பின் தானும் இறங்க முயன்றுள்ளார் அதற்குள் கார் முழுவதும் தீ பிடித்ததால் சீட் பெல்ட்டை கழற்ற முடியாமல் திணறிய திலீப் சீட்டில் அமர்ந்தபடியே தனது மகள், மனைவி கண்முன்னே எரிந்து உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தின்போது அருகில் இருந்த டோல் கேட் அதிகாரிகள் பற்றி எரிந்த தீயை அனைத்து திலீப்பைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இருந்தும் எந்தப் பலனும் இல்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பின் இதுபற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திலீப்பின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிர்பாராதவிதமாக நடந்த இந்தச் சம்பவம் திலீப்பின் குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon