மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு

ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு

ஜூன் மாதம் 30ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் தீயும் பற்றிக்கொண்டு கதிராமங்கலம் கிராமத்தையே பதறவைத்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம், காவல்துறை தாக்குதல், வழக்கு, என அந்தப் பிரச்சினையே இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதற்குள் மீண்டும் மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலம் பகுதியில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மக்களிடையே மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய்க் குழாய் அமைக்கப்பட்டது. மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓஎன்ஜிசி குழாயில் இன்று (13.8.2017) காலை 5 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அப்பகுதியில் ஒரு வாய்க்கால் அருகே 3 அடி ஆழத்தில் உள்ள குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே மாதிரிமங்கலத்தில் 3 முறை எண்ணெய்க் குழாய் உடைந்துள்ள நிலையில் இது 4ஆவது முறையாகும். இன்று நடைபெற்ற கசிவை அறிந்த மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதைப் பார்வையிட அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து மக்கள் அங்கே வந்து குவிந்துள்ளனர்.

மக்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளியூரிலிருந்து அப்பகுதிக்கு யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon