மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அசாமில் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த நான்கு நாள்களாகக் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அசாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையில் அசாம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரம் விடாமல் பெய்து வந்த மழையின் காரணமாக 14 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

திமாஜி, லக்கிம்பூர், பிஸ்வானாத், பாக்ஸா, பார்பெட்டா, போங்கியாகோன், சிராங், கிக்ராஜார், துபிரி, ஜோர்கட், மஜூலி, சிவ்சாகர், சாரோடியோ, டின்சுகியா மற்றும் திப்ரூகார் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 11 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் அபாய எல்லையைத் தாண்டி பிரம்மபுத்ராவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள கஸிரங்கா உயிரியல் பூங்காவின் பாதி பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள விலங்குகளை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப்படையும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டில் வெள்ளத்தால் அசாம் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு 85 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் திரிபுரா மாநிலத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஹவுரா நதி கரைபுரண்டு ஓடுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4,500 குடும்பங்கள் வசிப்பதற்கு வீடு இல்லாத நிலையில் உள்ளனர். 2,000 குடும்பங்கள் பல்வேறு அரசாங்க கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று 200 மி.மீட்டர் வரையில் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேகாலயாவில் 100 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. இதுபோல் அருணாச்சலப்பிரதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon