மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பிரதமரை நாளை சந்திக்கும் பன்னீர்செல்வம்!

பிரதமரை நாளை சந்திக்கும் பன்னீர்செல்வம்!

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். மேலும், நாளை பிரதமரைச் சந்திக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் இணைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பன்னீர்செல்வம் அணியினர் தர்ம யுத்தம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு தினகரனை நீக்கி, அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.

டெல்லி செல்வதற்கு முன், “எங்கள் கோரிக்கை பாதி நிறைவேற்றப்பட்டுள்ளது, மீதமும் நிறைவேற்றப்பட்டால் நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்று பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். தினகரன் நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு அணிகளும் இணைக்கப்படலாம் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறலாம் என்றும் பேச்சு எழுந்தது. இந்தச் சூழ்நிலையில், “டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தப் பிரதமர் மோடி, பன்னீர்செல்வத்தைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை” என்று கூறப்படுகிறது.

இதனால் டெல்லியிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்ற பன்னீர்செல்வம், அங்கிருந்து ஷீர்டி சென்று சாய்பாபா கோயிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். அங்குள்ள சனீஸ்வரன் கோயிலிலும் தரிசனம் செய்துள்ளார்.

இதற்கிடையே நாளை (ஆகஸ்ட் 14) 11 மணியளவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஷீர்டி தரிசனத்தை முடித்து விமானம் மூலம் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார். பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதால் நாளை இரு அணிகளும் இணைக்கப்படுவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon