மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மெழுகுச் சிலையாக மதுபாலா!

மெழுகுச் சிலையாக மதுபாலா!

மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி என்ற இயற்பெயருடைய நடிகை மதுபாலா இந்தியத் திரையுலகின் மர்லின் மன்றோ என்றும் காதல் தேவதை, கனவு கன்னி என்றும் வர்ணிக்கப்படுபவர். 1950-60-களில் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகை. இந்தப் படங்களில் பெரும்பாலானவை இன்று உன்னதமானவையாகவும், இன்றும்கூட ஏற்றுக்கொள்ளப்படக் கூடிவையாகவும் இருக்கின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அசோக் குமார், ராஜ் கபூர், ரெஹ்மான், பிரதீப் குமார், ஷம்மி கபூர், திலீப் குமார், குரு தத் மற்றும் தேவ் ஆனந்த் போன்ற பலருடனும் ஜோடி சேர்ந்தவர். நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே 1969இல் காலமானார். இந்த நிலையில் அவரின் கலைத்திறமையை கௌரவிக்கும்விதமாக புது டெல்லியில் அமைந்துள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை மதுபாலாவின் மெழுகுச்சிலையை திறந்துள்ளனர். மதுபாலாவின் சிலையை டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு, அவருடைய சகோதரி மதுர் ப்ரிஜி புஷன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள மெழுகுச்சிலை முகல்-ஏ-ஆசம் என்ற திரைப்படத்தில் மதுபாலா ஏற்று நடித்த அனார்கலி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மேடம் டுஸாட்ஸ் கலைஞர்களால் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஸ்டூடியோ நிபுணர் பெட்ரா, “இதற்காக மதுபாலாவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து பிரபலமடைந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்து அதில் பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆறு மாதங்களுக்கு மேலாக பல கலைஞர்கள் வேலை செய்தனர். இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் துணிகள் மற்றும் ஆபரணங்களுடன் நடிகை மது பாலாவை அழகாக வடிமைத்துள்ளோம்" என TIMES OF INDIA-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தச் சிலையை ரசிகர்களும் திரையுலகினரும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon