மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தமிழக வீரர் மரணம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தமிழக வீரர் மரணம்!

ஜம்மு காஷ்மீரில் ஷோஃபியான் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் இளையராஜா உள்பட இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஐந்து வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோஃபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு சென்று தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஷோஃபியான் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர்மீது மூர்க்கமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப்படையினரும் பதிலுக்குத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், ஷோஃபியான் பகுதி போர்க்களமானது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, இளையராஜா (25), கவாய் சுமேத் வாமன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்த வீரர் இளையராஜாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டானி கிராமம். இவருடைய மரணச் செய்தியை அறிந்த அவருடைய மனைவி செல்வி, பெற்றோர் பெரியசாமி - மீனாட்சி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால், கண்டானி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த கவாய் சுமேத் வாமன் மகாராஷ்டிராவில் உள்ள லோனக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த ஐந்து வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகளை எதிர்த்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஷோஃபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்தத் துப்பாக்கிச் சண்டை இன்று நண்பகல் தாண்டியும் நீடித்துவருகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon