மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

மின்சாரம் தாக்கிய சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காததைக் கண்டித்து செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை அருகே சுனாமி குடியிருப்பில் வசித்துவருபவர் குமார். இவருக்கு கார்த்திக் (10) என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைப் பூங்காவில் நேற்று, ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை கார்த்திக் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை சுற்றுச் சுவரின் உள்ளே விழுந்த பந்தை எடுக்கச் சென்ற கார்த்திக்கை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

அப்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு அப்பகுதி பொதுமக்கள் செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டுசெல்ல முயன்றுள்ளனர். அதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வராததால் கார்த்திக்கை ஆட்டோ ,மூலம் சோழிங்கநல்லூர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நாற்காலி, ஜன்னல், மருத்துவமனை அறிவிப்புப் பலகை என அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பின் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கலையச் செய்தனர். சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவமனைமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்று, கேரளாவில் சிகிச்சை அளிக்காததால் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon