மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

திருடனுக்கு மனைவியாகும் அமலா பால்!

திருடனுக்கு மனைவியாகும் அமலா பால்!

தனுஷுடன் இணைந்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தையடுத்து, தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவருகிறார் அமலா பால். ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ படத்திலும், சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும், சுசி.கணேசனின் திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகிறார் அமலா பால். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘காயம்குளம் கொச்சுன்னி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

36 வயதினிலே, மும்பை போலீஸ் ஆகிய படங்களை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். ரோஷன் ஆன்ட்ரூஸின் பெரும்பாலான திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பாபியும் சஞ்சய்யும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். பினோத் பிரதான் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கவுள்ளார்.

கேரள மாநிலத்தில் 19ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுன்னி என்கிற திருடன் ஒருவரைப் பற்றிய கதை இது. அதை சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து படமாக்க உள்ளார்கள். ராபின்ஹுட் போல பணம் அதிகமாக வைத்திருக்கும் கொள்ளைக்காரப் பணக்காரர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றைத் திருடி நலிந்த மக்களுக்கு அளிக்கும் கொச்சுன்னி பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.

அதில் நிவின் பாலியின் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அமலா பாலின் கேரக்டர் போஸ்டர் நேற்று (ஆகஸ்ட் 12) இணைதளத்தில் வெளியானது. இதுவரை அமலா பால் நடித்த பாத்திரங்களைவிட இப்படத்தின் ஸ்கெட்ச் போஸ்டர் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வருகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon