மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

‘ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணரலாமோ, இனியும் அவ்வாறு உணரலாம்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை செல்லும்முன் தன் அக்கா மகன் தினகரனைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றார். தினகரனுக்கு எதிரான குரல்கள் கட்சியில் வலுவாக ஒலிக்கத் தொடங்கியதை அடுத்து, ஆளும் அதிமுக அணியின் அமைச்சர்கள், தினகரனைக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாகக் கடந்த ஏப்ரலில் அறிவித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 4ஆம் தேதி தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து, தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனை நீக்கித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், தினகரன் சார்பில் நாளை மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்றுவரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று (ஆகஸ்ட் 13) தொண்டர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும் வாழ்வின் உச்ச நிலையைக் கடைக்கோடித் தொண்டரும் அடைய முடியும் என்பதை ஜெயலலிதா அதிமுக-வின் வாயிலாகப் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது அதிமுக-வில் மட்டுமே சாத்தியமாகும். இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கிவிடக் கூடாது” என்று அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள், எஃகுக் கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எஃகு கோட்டையில் விரிசல் விடாதா, தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா என எண்ணுகின்றனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன். முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம்” என்று சசிகலா எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

எடப்பாடி அணியினர் தினகரனை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் வந்துள்ள சசிகலாவின் இந்தக் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon