மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பெட்ரோ கெமிக்கல்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு!

பெட்ரோ  கெமிக்கல்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு!

பெட்ரோ மெமிக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் பெட்ரோல் மற்றும் கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விழிப்பு உணர்வு பிரசாரப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது இப்பிரசாரப் பயணம், சீர்காழி வட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாதானம், பழையபாளையம், திருமுல்லைவாசல், அகரவட்டாரம், வெட்டங்குடி, ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட 18 கிராமங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

“பெட்ரோலிய ரசாயன மண்டல பணிகள் நாகை, கடலூர் மாவட்டங்களில் 47 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படும். பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தின் மூலம் கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு போன்ற எந்த வளங்களையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று இது தொடர்பாக நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.

காவிரி டெல்டா பகுதி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நெற்களஞ்சியமாகத் திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “வரிகொடா இயக்கம்போல் கிராமங்கள்தோறும் இத்திட்டத்துக்கு நிலம் கொடா இயக்கம் தொடங்க உள்ளோம்” என்றார். “சுதந்திரத் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பெருமளவு கலந்துகொண்டு பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு நிலம் அளிக்கமாட்டோம் என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 29ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றும் பாண்டியன் தெரிவித்தார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon