மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

உசைனுக்குக் காயம்: கண்ணீருடன் ரசிகர்கள்!

உசைனுக்குக் காயம்: கண்ணீருடன் ரசிகர்கள்!

லண்டனில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன் ஷிப் 2017 தடகளப் போட்டிகளில் நேற்று (ஆகஸ்ட் 12) 4 x 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. இந்தத் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்று ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற 4 x 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட உசைன் போல்ட் வெற்றி பெற்றுத் தங்கப்பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் போட்டியில் 4ஆவது வீரராக ஓடிய உசைன் போல்ட், கடைசி நேரத்தில் வேகமாக ஓட முயற்சிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது இடது தொடையில் வலி ஏற்பட்டு ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதை கண்டதும் அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து உசைன் போல்ட்டுக்கு முதலுதவி செய்யும் குழு அவரைப் பரிசோதனை செய்தது. அவர் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என முதலுதவிக் குழுவினர் கூறினார்கள். அவருக்கு வீல் சேர் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர் கால் வலியுடன் நடந்தே சென்றார். இப்போட்டியில் பிரிட்டன் குழு முதல் பரிசைப் பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் உசைன் போல்ட் காயமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon