மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

கதிராமங்கலம் மீது அறிவிக்கப்படாத போர்!

கதிராமங்கலம் மீது அறிவிக்கப்படாத போர்!

‘தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டு வெளியேறும் திட்டம் இல்லை’ என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. ‘அதுமட்டுமின்றி, ஏற்கெனவே எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும்’ என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், “கதிராமங்கலம்மீது அறிவிக்கப்படாத போர் தொடுத்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்’’ என்று கேட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுபற்றி இன்று ஆகஸ்டு 13ஆம் தேதி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதைப் போன்று காவிரி பாசன மாவட்டங்களை முற்றிலுமாக எண்ணெய்க் கிணறுகளாக மாற்றுவதும், இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்தால் அனைத்து அடக்குமுறைகளையும் பயன்படுத்தி ஒடுக்குவதும்தான் அரசின் திட்டமாக உள்ளது. அதனால்தான் கதிராமங்கலத்தில் அறவழியில் போராட்டம் நடத்திவந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு எதிராக தொடங்கிய கதிராமங்கலம் மக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்... கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வடிகட்டிய பொய்யைக் கூறியுள்ளது. எண்ணெய்க் கிணறுகள் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. குழாய்களிலிருந்து வரும் தண்ணீரில் எண்ணெய்க் கலந்திருக்கிறது. இதை அப்பகுதியில் செயல்பட்டு வரும் அமைப்புகள் குடிநீர் தரச்சோதனை மூலம் நிரூபித்திருக்கின்றன. கதிராமங்கலம் மக்களை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருமுறை சந்தித்தபோதும் மஞ்சள் நிறமாக மாறிப்போன கச்சா எண்ணெய் கலந்த தண்ணீரை கொண்டுவந்து காட்டி, இந்தத் துயரத்துக்கு முடிவு கட்டும்படி கோரினர். ஆனால், சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 160 எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அவற்றிலிருந்து தினமும் 600 டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. மேலும் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, தங்களின் வருவாய் அதிகரித்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தனியார் நிறுவனம் போல செயல்படக் கூடாது. உண்மையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலம்மீது அறிவிக்கப்படாத போரைத் தொடுத்திருக்கிறது’’ என்று சொல்லும் ராமதாஸ்... “இந்த பிரச்னைகளுக்கெல்லாம் மூலக் காரணம் திமுக-வும், அதிமுக-வும்தான்” என்று தனது அரசியல் தாக்குதலையும் கலந்திருக்கிறார்.

“தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதனடிப்படையில் அந்தப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கு உரிமங்களை வழங்கி வருவது அதிமுக அரசு. அதிமுக-வும், திமுக-வும் மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும்கூட இதுபோன்ற தீமைகளை போட்டிப்போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மக்கள் நலனை பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்போது தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதைத் தடுத்து மக்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது?’’ என்று கேட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon