மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பாலிவுட்டில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்!

பாலிவுட்டில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டியின் மகனாகத் திரைத்துறையில் அறிமுகமான துல்கர் சல்மான், விரைவிலேயே தனக்கென்று ஓர் அடையாளம் பெற்றுவிட்டார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றுவருகிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். மலையாளம், தமிழ்த் திரையுலகில் மட்டும் கவனம் செலுத்திவந்த துல்கர் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். இவர் ‘யே ஜவானி ஹே தீவானி’, ‘டூ ஸ்டேட்ஸ்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ‘லைக் கேர்ள் இன் தி சிட்டி’, ‘லிட்டில் திங்க்ஸ்’ ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான மித்திலா பார்க்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோனி ஸ்க்ருவாலா தயாரிக்கும் இந்தப் படத்தில் இர்ஃபான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் பற்றிய தகவல்களை மித்திலா பார்க்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ஆகார்ஷ் குரானா Times Of India-க்கு அளித்த பேட்டியில், “ஓ காதல் கண்மணி படத்துக்குப் பின்தான் துல்கர் சல்மானை கவனிக்கத் தொடங்கினேன். அவர் நடித்த ‘சார்லி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ‘பெங்களூர் டேஸ்’, ‘கம்மாட்டிபடம்’ எனத் தொடர்ச்சியாக அவரது படங்களைப் பார்க்கும்போது அவர்தான் என் படத்துக்குச் சரியாகப் பொருந்துவார் எனத் தோன்றியது” எனத் தெரிவித்தார்.

“வாழ்க்கையின் வேறு வேறு பாதைகளில் செல்லும் இந்த கதாபாத்திரங்கள் ஓர் இடத்தில் சந்தித்துத் தங்களது வாழ்வைச் சேர்ந்து தொடங்குவது பற்றியதாகும்” என்று இந்தப் படத்தில் துல்கர் சல்மான், இர்ஃபான் கான் ஆகியோரது கதாபாத்திரம் குறித்து ஆகார்ஷ் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon