மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மோடியே வந்தாலும் வெற்றி பெற முடியாது: சித்தராமையா

மோடியே வந்தாலும் வெற்றி பெற முடியாது: சித்தராமையா

‘கர்நாடகத்தில் அமித்ஷா மட்டுமின்றி மோடி சுற்றுப்பயணம் செய்தாலும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியாது’ என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா, கர்நாடகத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. எனவே, கர்நாடகாவில் பாஜக-வைப் பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மூன்று நாள்கள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 12) பெங்களூரு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவர் பேசியதாவது, “கர்நாடகத்தில் 2018ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காகத் தான் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகப் பெங்களூருவுக்கு வந்துள்ளேன். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசு ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. வரவிருக்கின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 2018ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜக சந்திக்கும். எடியூரப்பா தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். 150 இடங்களில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பல்லாரியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். பாஜக-வைப் பலப்படுத்த போவதாகவும், சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதாகவும் சொல்கிறார்கள். அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தால் கர்நாடக பாஜக-வில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை.

அமித்ஷா வருகையால் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். கர்நாடக மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் அமித்ஷா வந்தாலும் சரி, பிரதமர் மோடி வந்தாலும் சரி கர்நாடகத்தில் பாஜக-வால் வெற்றி பெற முடியாது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் மக்கள் பாஜக மீது வெறுப்பில் உள்ளனர். தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது” என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon