மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

கவர்னர் வருகையால் பரபரப்பு!

கவர்னர் வருகையால் பரபரப்பு!

தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று திடீரென மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார். தற்போது நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் திடீர் சென்னை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்ததையடுத்து, சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தற்போது மூன்றாகப் பிரிந்துள்ளது. அதிமுக அம்மா அணியில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்குமிடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்ற மனக்குழப்பத்தில் உள்ளனர்.

தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என்று எதிர்தரப்பினர் கருதுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும், தேவைப்பட்டால் அதிமுக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிவித்துள்ளார்.

அதையடுத்து, ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு நேற்று முன்தினம் ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை தினகரன் தரப்பிலிருந்து ஆளுநர் மாளிகையை அணுகினர். ஆளுநர் இல்லாததால், அவர் சென்னை திரும்பியதும் அவரது கவனத்துக்குக்கொண்டு செல்கிறோம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி திடீரென மும்பையில் இருந்து சென்னைக்கு வருகைப் புரிந்தார். சென்னையில் நடைபெற்ற உடல்தானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசுகையில், “உடல்தானம் விழிப்பு உணர்வு குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு அமைத்து பொதுமக்களிடம் அதிக விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

ஆளுநரின் திடீர் வருகையையடுத்து, தினகரன் ஆளுநரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டால், எடப்பாடி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளத் தினகரன் சார்பில் கடிதம் கொடுக்கப்படும் என்று அவரது எம்.எல்.ஏ-க்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, ஆளுநர் வட்டாரத்தில் தினகரன் சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதா என்று விசாரிக்கையில், நேற்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மட்டுமே ஆளுநர் சென்னை வந்துள்ளதாகவும், சென்னையில் அவர் வேறு யாரையும் பார்ப்பதாக இல்லை என்றும் ஆளுநர் அலுவலக வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon