மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

 மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 63 குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஐந்து நாள்களில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 48 மணி நேரத்தில் இறந்த 30 குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள். மருத்துவமனை நிர்வாகம், ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால், அந்தத் தொகையை மருத்துவமனை செலுத்தாததால் அந்நிறுவனம் ஆக்சிஜன் உபகரணங்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் குழந்தைகளின் இறப்புக்குச் சரியான காரணம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. சம்பவ இடத்துக்கு மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘கடந்த ஐந்து நாள்களில் 63 குழந்தைகள் பலியானதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறைதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சிதார்த்நாத் சிங் நடத்திய ஆய்வில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி முதல்வர் பாபா ராகவ்தாஸ் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும், கடந்த 30 வருடங்களில், அங்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட சில காய்ச்சல் காரணமாக 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon