மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சண்டே சர்ச்சை: இந்தியத் திரையுலகைக் குறிவைக்கும் நிறுவனங்கள்!

சண்டே சர்ச்சை: இந்தியத் திரையுலகைக் குறிவைக்கும் நிறுவனங்கள்!

இந்தியாவில் தற்போது இணையச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவைக் குறிவைக்கும் அமெரிக்க வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்களான நெட்ப்ளிக்ஸ், அமேசான் வீடியோ ப்ரைம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பொழுதுபோக்கு ஊடகங்களுக்கான இணையச் சேவையில் தங்களது சந்தையை விரிவுபடுத்த தற்போது போட்டி போட ஆரம்பித்துவிட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இணையச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. “இந்திய மக்கள்தொகையில் 373 மில்லியன் பேர் இணையச் சேவையை உபயோகிக்கின்றனர். இதுவே 2021ஆம் ஆண்டுக்குள் 829 மில்லியனாக அதிகரிக்கும்” என்று ‘சிஸ்கோ’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மொபைல் இணையத்துக்கான இந்தியச் சந்தை குறித்து ஆராய்ச்சி செய்யும் IMRB இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள கணைக்குப்படி, இணையச் சேவைக்காக 77% நகர மக்களும் 92% கிராமப்புற மக்களும் மொபைல்போன்களையே முதன்மையாகப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. இந்தியாவில் இணையச் சேவை பயன்பாட்டில் அதிகப்படியாகப் பொழுதுபோக்கு அம்சங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதும் இவர்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆப் வாயிலாக தாங்கள் விரும்பும் திரைப்படம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை அதிகம் பார்க்கின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரியவர, இந்தியத் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெறவும் பார்வையாளர்களைத் தக்கவைக்கவும் பெரும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மொபைல் ஆப் பயன்பாடு குறித்து பகுப்பாய்வு செய்யும் ‘ஆப் அன்னி’ நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், “கடந்த ஆண்டு, வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் உபயோகத்தில் ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஹாட் ஸ்டார் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜியோ டி.வி இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தன. மேலும், அமெரிக்க நிறுவனங்களான அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தன. மாதாந்திரப் பயன்பாட்டின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று ஆப் அன்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையால், இந்தியர்கள் தங்கள் நாட்டு திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையுமே பெரிதும் விரும்புகின்றனர் என்ற முடிவு வெளியானது. இந்த நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆப் உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் அவர்களது சந்தையை விரிவுசெய்ய இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், கேம்ஸ் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் ஸ்ட்ரீமிங் உரிமையை விலைக்கு வாங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் உலக அளவில் பெரும் வெற்றிபெற்ற பாகுபலி படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் ரஜினியின் 2.0 படத்தின் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களையும் இந்த நிறுவனங்கள் விலைக்கு வாங்குவதோடு இந்தியாவின் பல முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் ப்ரைம் நிறுவனம் பாலிவுட் பிரபலமான கரன் ஷோகரின் ‘தர்மா புரொடக்ஷன்’ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அவர்களது தயாரிப்பில் வெளிவரும் அனைத்துப் படங்களின் உரிமையையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து தர்மா புரொடக்ஷன் நிர்வாக தலைவர் கூறியதாவது, “நாங்கள் டிஜிட்டல் மீடியாவின் வீடியோ-ஆன்-டிமேண்ட் மற்றும் OTT தளங்களை உன்னிப்பாகக் கவனித்ததில் பாலிவுட் தரவுகளுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, எங்கள் நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனமான அமேசான் உடன் இணைவதால் எங்கள் படங்கள் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படி இந்தியப் படங்களை இந்த ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பல கோடி ரூபாய்க்கு வாங்குவது படத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பெரும் வருமானமாக அமைந்தாலும் இந்தப் படங்களால் மீண்டும் அந்த ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் வருமானம் ஈட்டுமா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. தற்போதுள்ள நவீன சூழல் அனைத்தும் திருட்டுத்தனமாக கிடைக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

திரைப்படம் வெளியான அன்றே இணையத்தில் படங்கள் வெளியிடப்படும் நிலையில், சராசரியாகப் படம் திரைக்கு வந்து 90 நாள்களுக்குப் பிறகு அந்தப் படத்தைப் பெரும் தொகைக்கு வாங்கி ஸ்ட்ரீமிங் முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் சம்பாதிப்பது என்பது அந்த நிறுவனங்களுக்கு நெருக்கடியான சூழலை உருவாக்கும்.

சாதாரணமாகவே பெரிய நடிகர்களின் படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கி நஷ்டமடைந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டுப் போராடும் சூழல் தற்போது வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், தங்களது வர்த்தக சந்தையை விரிவுபடுத்த இந்த நிறுவனங்கள் செய்யும் பெரும் முதலீடு எந்த அளவுக்கு லாபம் ஈட்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon