மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மீண்டும் சிவாஜி சிலை?

மீண்டும் சிவாஜி சிலை?

‘சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினா கடற்கரையில் ஏதாவது ஓர் இடத்தில் வைக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.

மெரினா கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை குறித்த வழக்கின் தீர்ப்பை அடுத்து, அண்மையில் இரவோடு இரவாகத் தமிழக அரசால் அந்தச் சிலை அகற்றப்பட்டது. சிவாஜி கணேசனுக்காக அமையவுள்ள மணி மண்டபத்தில் அந்தச் சிலை வைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிவாஜி சிலை அகற்றப்பட்டது அவமரியாதையான செயல், முன்பு மெரினாவிலிருந்து கண்ணகி சிலையை அகற்ற என்ன அரசியல் காரணமோ அதுதான் தற்போது சிவாஜி சிலை அகற்றுவதற்கும் காரணம். சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்துகள் நடந்தன என்ற விவரம் யாரிடமும் இல்லை. மீண்டும் கடற்கரையில் அவர் சிலையை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

“சிவாஜி அபூர்வமான கலைஞர். மீண்டும் மெரினா கடற்கரையில் அவருக்குச் சிலை அமைக்க வேண்டும். சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை” என்று விக்ரமன், ஆர்.கே. செல்வமணி ஆகியோர் கூறினார்கள்.

கடற்கரையில் சிலை அமைப்பது குறித்து முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறி இருப்பதாவது:

“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர் என்று சிவாஜிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவர். உரை நடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த் தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல்.”

இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon