மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: எண்ணூர் உப்பங்கழியில் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியுமா? - நித்யனந்த் ஜெயராமன்

சிறப்புக் கட்டுரை: எண்ணூர் உப்பங்கழியில் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியுமா? - நித்யனந்த் ஜெயராமன்

உள்ளூர் மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது ஏன் மீன்பிடித் தொழில்களுக்கு உகந்ததாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன் ஒரு உப்பங்கழி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

உப்பங்கழி என்பது ஒரு நீரேற்ற நீர்நிலைப் பகுதி. எண்ணூர் உப்பங்கழியின் மொத்த பரப்பளவு 8,000 ஏக்கர்கள். புலிகாட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி நதி, உப்பங்கழிக்கு வந்து சேர்ந்து தெற்கு திசையில் பாய்ந்து முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தெற்குப்பக்கம் கொசஸ்தலை நதி இந்த உப்பங்கழியில் வந்து இணைகிறது. கொசஸ்தலையும் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கொசஸ்தலை மற்றும் ஆரணி நதிகளின் நீர் சமுத்திரமுனையில் சந்திக்கின்றன. இதைத் தவிர, பக்கிங்காம் கால்வாயும் சென்ட்ரல் ஸ்டேஷன், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் முகத்துவாரம் பகுதிக்கு வந்தடைகிறது.

முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகள் இருந்தன. ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும் மண்மேடுகளும் உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாயில் உள்ள நீர் ஆழமாக பாய்ந்தோடியது. முகத்துவாரம் திறந்திருந்தது. ஒவ்வொரு அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்கள் மற்றும் இறால் உப்பங்கழிக்கு வந்து பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இடும்.

பல ஆண்டுகளாக, இங்குப் பல்வேறு மோசமான நிகழ்வுகள் நடைபெற்றன. அவை...

அ) சென்னை, ஆர்.கே.நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது.

ஆ) மணலி தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகள் இந்த உப்பங்கழியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலக்கிறது.

இ) வள்ளூர் மின் நிலையம், வடசென்னை மின் நிலையம், இ.டி.பி.எஸ், ஹெச்.பி.சி.எல். எண்ணெய் கம்பெனி, பி.பி.சி.எல் எண்ணெய் கம்பெனி மற்றும் காமராஜர் துறைமுகம் போன்ற நிறுவனங்கள் இந்த நீர்நிலைப் பகுதியின் 1,000 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளன. இதைச் செய்வதன்மூலம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இங்குள்ள செழிப்பான மண் மேடுகள் மற்றும் சதுப்புநிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.

ஈ) இந்த அத்துமீறிய ஊடுருவல்களும் குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பல்களும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன. இதன், இரண்டு பக்க விளைவுகளாக – ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்ததால் மீன்கள் அதில் உயிர்வாழ்வது சிக்கலாகிவிட்டது. மேலும் வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பலில் அந்த வழியாக வரும் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது.

உ) வடசென்னை மின் நிலையம் நேரடியாக முகத்துவாரப்பகுதிக்கு அதன் வெப்ப நீரை வெளியேற்றுகிறது. உயர் அலையேற்ற காலகட்டத்தில்கூட, வெப்ப நீர் காரணமாக இந்த உப்பங்கழிப்பகுதிக்கு மீன்கள் வருவதில்லை.

நதியைக் காக்க அல்லது நமது வாழ்வாதாரத்தைக் காக்க எந்த சட்டமும் இல்லையா?

சட்டங்கள் உள்ளன. உண்மையில் 6,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள எண்ணூர் உப்பங்கழியில் 6,500 ஏக்கரை பகுதியைப் பாதுகாக்க கோரி அரசே பரிந்துரைத்து, அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்குக் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 16 கி.மீ. நீளம்கொண்ட கருங்காலி நதியின் முகத்துவாரத்திலிருந்து எண்ணூர் முகத்துவாரம் வரையிலான பகுதி, 1996ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆர்.இசட்) வரைபடத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம்கண்டு பாதுகாக்கிறது. மீன்பிடி பகுதிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது மண்ணை நதியில் கொட்டுவது, அல்லது உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. நதியை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட அனுமதி கிடையாது.

இவ்வளவு கடுமையான சட்டங்கள் உள்ளன என்றால், இந்த நதி ஏன் இப்போது இருக்கும் மோசமான நிலையில் உள்ளது?

வெறும் சட்டங்கள் இருப்பதால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு, அவர்களுக்குச் சட்டம் என்ன என்பது தெரிய வேண்டும். அதோடு அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் ஆர்வம் கொண்டுள்ள மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த எண்ணூர் நிலவரத்தில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், அவர்கள் தங்களுக்குச் சாதகமாக உள்ள சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இதைச் செய்தனர். மேலும், சரியான நேரத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். வள்ளூர் மின் ஆலை அல்லது ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். எனவே இந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை - தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்றாலும்கூட – கொடுத்துவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன.

மேலும், அரசு ஏஜென்சிகளை இதற்குப் பொறுப்பாளிகள் ஆக்குவதற்கு நாம் போதுவான முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதால், பல மோசமான விஷயங்கள் நடைபெறுகின்றன. எண்ணூர் உப்பங்கழி பகுதி அபிவிருத்தி மண்டலம் கிடையாது என்ற சட்டம் அமலாக்கப்படுவதையும், இந்தப் பகுதியின் 1996ஆம் ஆண்டின் வரைபடம் அறிவிப்பின்படி எண்ணூர் உப்பங்கழி பகுதியின் 6,500 ஏக்கரில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதையும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கும் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். 2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுக்கிறது. காளாஞ்சி அருகே உள்ள முகத்துவாரம் மற்றும் சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட இந்த வரைப்படத்தைப் பயன்படுத்தி இந்த நதியின் 1,000 ஏக்கர் பகுதியை காமராஜர் துறைமுகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அந்தத் துறைமுகம் நதியின் மேல் ஒரு கார் நிற்கும் முனையம், நிலக்கரி கிடங்கும் ஆகியவற்றை கட்ட விரும்புகிறது. இதற்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க வைப்பதற்கான பொறுப்பு குடிமக்களுக்கு உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டும். இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோர வேண்டும்.

(மேலும் அலசுவோம்…)

கட்டுரையாளர் குறிப்பு: நித்யனந்த் ஜெயராமன். சுற்றுச்சூழல் ஆர்வலர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றி வருபவர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon