மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

‘நோ-பால்’ தந்த வெற்றி!

‘நோ-பால்’ தந்த வெற்றி!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்றிரவு (ஆகஸ்ட் 12) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் அணியும், கோவை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

காயத்தால் இலங்கை தொடரில் இருந்து விலகிய இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் முரளி விஜய், இந்த சீசனில் முதல் முறையாக கோவை அணிக்காக நேற்று களமிறங்கினார். டாஸ் ஜெயித்த கோவை கேப்டன் முரளி விஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய திருவள்ளூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாபா அபராஜித் 60 ரன்களும் (31 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் தன்வார் ஆட்டமிழக்காமல் 55 ரன்களும் (22 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய கோவை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்ட முயற்சித்தது. இருப்பினும் தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் 5 ரன்களில் வெளியேறினார். ஆனால், கேப்டன் முரளி விஜய்யும், அனிருத் சீத்தா ராமும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். விஜய் 69 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் சீத்தாராம் - அக்‌ஷய் சீனிவாசன் ஜோடி கோவை அணியை இறுதிவரை அழைத்துச் சென்றது. பரபரப்பான கடைசி ஓவரில் கோவை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் வீசினார்.

கடைசி பந்தில் கோவை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தினை அபிசேக் ‘நோ-பால்’ ஆக வீசியதால் அதிகபட்சமாக கோவை அணிக்கு 3 ரன்கள் கிடைத்தன. இதையடுத்து ‘ஃப்ரி-ஹிட்’டாக வீசியப்பட்ட கடைசி பந்தில் கோவை அணியினர் 2 ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். கோவை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon