மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மாநில அரசை முடக்குவது ஜனநாயக விரோதம்!

மாநில அரசை முடக்குவது ஜனநாயக விரோதம்!

‘நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 85 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்பேரில் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை உடனடியாக மாணவர்களின் நலன்கருதி அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், மாநில அரசை முடக்கி வைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும். தமிழகத்தில் அரசுப் பணிகள் எதுவும் செயல்படாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதன் பின்னணி குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon