மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

இந்தாண்டு ஜல்லிக்கட்டு விநாயகர்!

இந்தாண்டு ஜல்லிக்கட்டு விநாயகர்!

இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஜல்லிக்கட்டுச் சிறப்பை உணர்த்தும்வகையில் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை புதிதாகக் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு அடி முதல் சுமார் பதினைந்து அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருமே போராடினர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சிறப்பை உணர்த்தும்வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்குக் கோவையில் ஜல்லிக்கட்டு விநாயகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையை விநாயகர் பெருமான் அடக்குவது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

சுண்டக்காமுத்தூர் - புட்டுவிக்கி சாலையில் உள்ள விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை சுமார் பத்தடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பொதுமக்களை கவரும் வகைகளில் பல்வேறு வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைகள் திருச்சியிலும் தயாரிக்கப்படுகிறது. திருச்சி மட்டுமின்றி தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விநாயகர் சிலைகள் ரசாயனப் பூச்சு கலக்கப்படுகின்றன. அதை நீர்நிலைகளில் கரைக்கும்போது, நீர்நிலைகள் மாசுபாடு அடைகின்றன எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் சிலை தயாரிப்பதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. சிலைக்கு பெயின்ட் அடிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலை கரைப்பு சம்பந்தமான விதிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon