மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

எம்.எல்.ஏ-க்கள்மீது முதல்வர் கோபம்!

எம்.எல்.ஏ-க்கள்மீது முதல்வர் கோபம்!

கடலூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. விழா வேலைகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றுவரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் ஒதுங்கி நிற்கிறார்கள்.

பிரிந்திருக்கும் எம்.எல்.ஏ-க்களை ஒன்று சேர்க்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி சீனியர் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரை கடலூருக்கு அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடலூர் வந்த சீனியர் அமைச்சர்கள் ஒதுங்கி நிற்கும் எம்.எல்.ஏ-க்களான பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், விருத்தாசலம் கலைசெல்வன், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோரை அழைத்தார்கள். ஆனால் எம்.எல்.ஏ-க்கள் யாரும் வரவில்லை. முதலமைச்சரின் அறிவுரைப்படி அமைச்சர்கள் கடலூர் வந்தும்கூட, அவர்கள் அழைத்தும்கூட எம்.எல்.ஏ-க்கள் வரவில்லை என்ற தகவல் முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை கடலூர் மாவட்டத்திலிருந்து சென்ற 50 நிர்வாகிகள் முதல்வரைச் சந்தித்தனர். தலைமைக் கழகத்துக்குப் புறப்பட தயாராகவிருந்த முதல்வர் குறைகளைக் கேட்க, கடலூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி ஒன்று அறிவியுங்கள் என்றவர்கள், அமைச்சர் சம்பத்மீது குறைகளைச் சொல்லத் தொடங்கியதும், உடனே முதல்வர்... “உங்கள் மாவட்ட எம்.எல்.ஏ-க்களை சமாதானம் செய்வதற்கு சீனியர் அமைச்சர்கள் நான்கு பேரை அனுப்பினேன். அந்த எம்.எல்.ஏ-க்கள் என்னையும் மதிக்கவில்லை. அமைச்சர்களையும் மதிக்கவில்லை. இனிமேல் நான் என்ன செய்வது?” என்று கோபமாக பேசியுள்ளார் .

எம்.எல்.ஏ-க்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டுமே என்று இப்போது தீவிரமாக உழைத்து வருகிறார் அமைச்சர் சம்பத்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon