மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

106 ஆண்டுகள் பழைமையான கேக் கண்டுபிடிப்பு!

106 ஆண்டுகள் பழைமையான கேக் கண்டுபிடிப்பு!

அன்டார்ட்டிக்காவில் 106 ஆண்டுகள் பழைமையான ஃப்ரூட் கேக் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கேக் உண்ணும் நிலையில் உள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்டார்ட்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட்டைச் சேர்ந்த பாதுகாவலர்கள் கடந்த ஆண்டு முதல் கேப் அடேரிலிருக்கும் கலைப்படைப்புகளைப் பாதுகாத்து வருகின்றனர். அங்கிருந்து இந்தப் பழைமையான கேக்கைக் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டிஷ் கேக் தயாரிப்பாளர்களான ஹன்ட்லி & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளனர். அந்த கேக்கைச் சுற்றியிருந்த காகிதத்தில் அவர்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. 1910-1913இல் டெர்ரா நோவா பயணத்தின்போது பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கேக்கைக் கொண்டுவந்தார் என நம்புகின்றனர்.

இதுகுறித்து ஆர்டிஃபாக்ட்ஸ் திட்ட மேலாளர் லிசி மீக், ‘துருப்பிடித்த தகர டப்பாவினுள் இந்த கேக் பாதுகாக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. கேக்கில் கொழுப்புச் சத்தும், சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் குளிர்ப்பகுதிக்கு ஏற்றவாறு அது உள்ளது. புதிய கேக் போன்ற வாசனை வரவில்லை என்றாலும், பார்க்க இந்த கேக் மிகவும் அழகாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

கேக்கைத் தவிர ஆயுதங்கள், துணிமணிகள், அழுகிய இறைச்சி வகைகள், உண்ணக்கூடிய நிலையில் உள்ள ஜாம் வகைகள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட 1,500 பொருள்களும் விரைவில் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon