மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

உங்கள் பாராட்டு நியாயமானதா?

உங்கள் பாராட்டு நியாயமானதா?

இந்தியக் கடற்படையினர்மீது பல காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாகத் தமிழக மீனவர்கள் தினந்தோறும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்போதெல்லாம் இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. தமிழக மீனவர்கள் ஒருபுறம் பெரும் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்க, மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியப் பாதுகாப்புத்துறையினர் பற்றிக் குறிப்பாக கடற்படை பாதுகாப்புத்துறையினர் குறித்து மிகுந்த அக்கறையுடன் பரிந்து பேசியிருக்கிறார்.

கோவாவின் வாஸ்கோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று (12.8.2017) மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், ஷவுர்யா என்ற கடற்படை கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“இந்தியப் பாதுகாப்புப் படையினர்மீது குறை கூறுபவர்கள், அவர்களது திறமை குறித்துத் தெரிந்து கொள்வதில்லை. நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்வதற்காக, அவர்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முதலில், அரசியல்வாதிகளை மட்டுமே குறைகூறி வந்தனர். ஆனால், இப்போது ராணுவம், கப்பற்படை, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரையும் குறைகூறி வருகின்றனர். தகுந்த காரணமின்றி யாரும் யாரையும் குறைகூற வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், “எல்லையில் உண்மையாகப் பாதுகாப்பு இருந்தால் நாங்கள் ஏன் குறை கூறப்போகிறோம். உங்கள் பாராட்டு நியாயமானதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் தமிழக மீனவர்கள்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon