மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை!

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைத்துச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற தேசிய கைத்தறி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மூத்த அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்ற முதல்வர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதனால், தமிழக மாணவ, மாணவியர்களின் உரிமை நிச்சயமாகப் பாதுகாக்கப்படும்.

காஞ்சிபுரத்துக்கு நிகராக கோவையிலும் கைத்தறி சேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அதிமுக அரசு வழங்கி வருகிறது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

கைத்தறித்துறைக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரிக்கு நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி ஜி.எஸ்.டி. வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க முதல்வர் வலியுறுத்தினார். மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதில் முன்னுரிமை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon