மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

நடிகை ஹிமா சங்கர் புகார்!

நடிகை ஹிமா சங்கர் புகார்!

பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாளத் திரைத்துறையில் நடிகர்கள் அணி, நடிகைகள் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வுக்கு எதிராக நடிகைகள் தங்களுக்கு என்று தனியாக ஒரு அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.

தற்போது நடிகைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலையாளத் திரை உலகில் நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் குறித்துப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு மலையாள நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட் கருத்து தெரிவிக்கும்போது “நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை யாரும் பாலியல் இச்சைக்குக் கட்டாயப்படுத்துவது கிடையாது. சில ‘தவறான’ நடிகைகளே பட வாய்ப்புக்காக விருப்பப்பட்டு அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு எதிராக நடிகைகள் அமைப்பு சார்பாகக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சர்வபரி பாலக்கரன், ஹிமாலயத்திலே காஷ்மலன் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள ஹிமா சங்கர், பட வாய்ப்புக்காகச் சிலர் தன்னைப் படுக்கைக்கு அழைத்ததாகக் கூறிய கருத்து மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்ட நடிகை ஹிமா சங்கர் நிருபர்களிடம், “நான் நடிப்பு பயிற்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். சில நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பட வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள் அவர்கள்” என்று சொன்னவர், அது என்ன நிபந்தனை என்பதையும் போட்டு உடைத்தார். “அவர்களே அதை விவரித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். படுக்கையுடன், நடிப்பு என்பதே அந்த நிபந்தனை. அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டேன். இதுபோன்று மூன்று முறை நிகழ்ந்துள்ளது” என்ற ஹிமா சங்கர், “ஆணாதிக்கம் மிக்க மலையாளத் திரையுலகில் பெண்கள் தங்கள் கருத்துகளைத் தைரியமாகக் கூற வேண்டும் என்கிறார்கள். ஆனால், பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தால், உடனே அவர் புறக்கணிக்கப்படுகிறார்” என்றும் தெரிவித்தார்.

நடிகை பார்வதி திருவொத்தும் நடிகைகளுக்குப் பட வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிக்கல் குறித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon