மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாட்டில் கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருள்கள் கடத்தி விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்குப் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்படும் விரைவு ரயில்களை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்

அப்போது மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (27) என்ற இளைஞரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் விஷாலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் புரூனோ, “இந்த வகையான போதைப் பொருள்கள் தென் ஆப்பிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கலாம். கைது செய்யப்பட்ட நபருக்குத் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருளைக் கொடுத்து விற்க சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி குற்றவாளிக்குத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கும்பலிடம் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon