மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

வட கொரியாவின் அடுத்தத் தாக்குதல்!

வட கொரியாவின் அடுத்தத் தாக்குதல்!

வட கொரியா அரசு தனது அடுத்தகட்ட பரிசோதனையாக நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வட கொரியா பதற்றத்தை உருவாக்கியதையடுத்து, அமெரிக்க அரசு தலையீட்டின் பேரில் ஐ.நா. சபை வட கொரியாமீது பொருளாதாரத் தடையை விதித்து உத்தரவிட்டது. இதனால், பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட கொரியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தி பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் வட கொரிய அரசு ஈடுபடுவதை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா அமைப்பின் உளவு செயற்கைக்கோள் படம்பிடித்ததன் மூலமாகத் தெரியவந்துள்ளது.

வட கொரியா வசம் ஏற்கெனவே புகுகுக்சோங்-1 எனும் நீர்மூழ்கி ஏவுகணை உள்ளது. தற்போது, அந்த நீர்மூழ்கி ஏவுகணையில் கூடுதல் தொழில்நுட்பத்தின்மூலம் அதிக வசதியை மேம்படுத்த முயல்வதாக ராணுவ நிபுணர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீர்மூழ்கி ஏவுகணையை வட கொரியா அரசு கடந்த வருடமே வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்திவரும் வட கொரியா, அடுத்ததாக நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனையிலும் இறங்கியிருப்பது அமெரிக்க அரசுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில், வட கொரியாமீது அமெரிக்கா போர் தொடுத்தால், திருப்பித் தாக்குவதற்கு தயாராக 3.47 மில்லியன் வீரர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான வட கொரியா அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது